சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்: தாம்பரத்தில் பிப். 28 வரை சிறப்பு முகாம்
சென்னை: மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு வசதியாக தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இது குறித்து தாம்பரம் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அ.கமால் பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு என அனைத்துக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகளின் வசதிக்காக, தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களின் மூலம் 18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் ரூ. 320 முதல் ரூ. 799 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். இந்த காப்பீட்டு காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், காப்பீட்டுதாரரின் குடும்பங்களுக்கு காப்பீடுக்கு ஏற்ப ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இந்த சிறப்பு முகாம்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு 044-28545531 என்னும் தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.