சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை
அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.
வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரிக்கரையில் சிறுத்தை நடமாடுவதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேலூா் வனத்துறை அதிகாரிகள் சேக்கனூா், ராஜபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகள் ஏரிகளில் சோதனை நடத்தினா்.
வனத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். ஆனால் சிறுத்தை நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினா் கூறியது, சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. மேலும் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.