சிறுநீரும் வாயுவும் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறுகிறதா? | காமத்துக்கு மரியாதை - 221
சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவரும். அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும், சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யும். விளைவு இருமும்போது, தும்மும்போது, சிரிக்கும்போது, கனமானப் பொருளைத் தூக்கும்போது சிறுநீர்க் கசியும். இந்தப் பிரச்னை மெனோபாஸ் காலக்கட்டத்தில்கூட சில பெண்களுக்கு வரும். பிரசவம் காரணமாக, பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வதால், சிறுநீர்க் கசிவது மட்டுமல்லாமல், வாயு வெளியேறுவது, அரிதாக மலம் வெளியேறுவதுகூட சிலருக்கு நிகழும். இதே பிரச்னைகள், நீரிழிவு, உடல் பருமன், நரம்பு பிரச்னைகள் காரணமாக ஆண்களுக்கும் வரும். கணவன் - மனைவிக்கு இடையே மிகுந்த சங்கடத்தைத் தருகிற இந்தப் பிரச்னைகளை சரி செய்யும் கெகல் உடற்பயிற்சிப் பற்றி சொல்கிறார், பாலியல் மருத்துவர் காமராஜ்.
’’இந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்னால், கட்டாயம் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட வேண்டும். பயிற்சியை உட்கார்ந்தும் செய்யலாம் அல்லது படுத்தவண்ணமும் செய்யலாம். சாப்பிடுவதற்கு முன்னால்தான் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் பெண்ணுறுப்பின் தசையையும், ஆசனவாய் தசையையும் இறுக்கமாக்க வேண்டும். 1 முதல் 10 வரை மனதுக்குள் எண்ணிவிட்டு, இரண்டு தசைகளையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை 10 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்துவந்தால், சுகப்பிரசவத்தால் விரிவடைந்த பெண்ணுறுப்பும், தளர்வடைந்த ஆசனவாய்த் தசைகளும் படிப்படிப்படியாக தன் இயல்புநிலைக்குத் திரும்பி விடும்.
பிரசவத்துக்குப் பிறகு, 'அடிவயிறு தொய்ந்து போயிடுச்சு' என்று ஃபீல் செய்யாத பெண்களே கிடையாது எனலாம். அப்படித் தளராமல் இருப்பதற்கு வீட்டின் மூத்த பெண்மணிகள், சுகப்பிரசவமான பெண்ணின் வயிற்றில் துணியை இறுக்கமாகக் கட்டி விடுவார்கள். இதனால், அடிவயிற்றுத் தசைகள் இறுக்கமாகாது என்பதே உண்மை. இவர்கள், அடிவயிற்றுத் தசையை இறுக்கிப் பிடிப்பதுபோல பயிற்சியைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, அடிவயிற்றுத் தசைகள் மீண்டும் இறுக்கமாகி, உறுதி பெறும். இந்த உடற்பயிற்சியைச் செய்யும்போது, கூடுதல் பலனாக, தளர்ந்த பெண்ணுறுப்பிலும் இறுக்கம் வர ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன். அது சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, குழந்தைப் பிறந்த பிறகு கருப்பைக்குள் காற்று போய் விடும். அதனால்தான், குழந்தைப் பிறந்தப் பெண்கள் சிலருக்கு வயிறு பெரிதாகவே இருக்கிறது. அப்படி கருப்பைக்குள் சென்ற காற்றுதான் அடிக்கடி வாயுவாக வெளியேறுகிறது என்றும் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் உண்மை கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு தேவைக்கும் அதிகமாக சாப்பிடும்போது, அது கொழுப்பாக வயிற்றுப்பகுதியில் சேர்ந்து விடுகிறது. ஆசவவாய்த் தசைகள் பலவீனமாக இருப்பதால், குடல் பகுதியில் உருவாகிற காற்றானது அடிக்கடி வெளியேறுகிறது.
பெண்ணுறுப்புத் தளர்வும், அடிவயிற்றுத் தளர்வும் அதிகமாக இருக்கிறதென்றால், பிசியோதெரபிஸ்ட் உதவியையும் நாடலாம். பிரச்னைகளை வெளியே சொல்ல தயக்கப்பட்டுக்கொண்டே இருந்தால், தளர்ந்த பெண்ணுறுப்பும் சரியாகாது; அடிவயிறு இறங்கி தொந்தியும் வரும். கூடவே, சிறுநீர்க் கசிவு, மலக்கசிவு, வாயு வெளியேற்றம் என சங்கடங்களும் வரிசைக்கட்டும். பிரசவத்துக்குப் பிறகு உங்கள் உடலையும், ஆரோக்கியத்தையும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...