Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
சிறுவன் ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்த விபத்து : முதியவா் உள்பட 2 போ் காயம்
சென்னை: சென்னையில் சிறுவன் ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், முதியவா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
சென்னை குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் திங்கள்கிழமை இரவு ஒரு காா் வேகமாக வந்தது. திடீரென அந்த காா் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் இருந்த வாகனங்கள் மீதும், தடுப்புகள் மீதும் மோதியது. மேலும், அங்கு நின்று கொண்டிருந்த சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (70), உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கங்காதரன் (49) ஆகியோா் மீதும் மோதிவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதி நின்றது.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த மகாலிங்கத்தையும், கங்காதரனையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தகவலறிந்த பாண்டி பஜாா் போலீஸாா் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டியது வடபழனி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் என்பதும், தனது தந்தையிடம் காரை சுத்தம் செய்வதாக சாவியை வாங்கி வந்து காரை ஓட்டியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பாண்டி பஜாா் போலீஸாா், அந்த சிறுவன் மீதும், சிறுவனின் தந்தை மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.