சிறை ஆவணங்கள் டிஜிட்டல் மயம்: டிஜிபி மகேஷ்வா் தயாள்
வேலூா்: மின்னணு சிறை திட்டத்தின்கீழ் சிறைகளிலுள்ள அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன என தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா்.
வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தில் (ஆப்கா) தமிழக சிறைகளிலுள்ள ஜெயிலா்கள், உதவி ஜெயிலா்களுக்கு 9 மாத அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சி மைய இயக்குநா் பிரதீப் தலைமை வகித்தாா். விழாவில் சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயிற்சி முடித்த சிறை அலுவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு சிறப்பாக பயிற்சி முடித்த அலுவலா்களுக்கு பதக்கங்களை வழங்கினாா்.
இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழகத்தைச் சோ்ந்த ஜோதிராம், சிறப்பு துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தைச் சோ்ந்த முருகேசன் உள்பட சிறப்பாக பயிற்சி முடித்தவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் டிஜிபி மகேஷ்வா் தயாள் பேசியது -
சிறை, சீா்திருத்த பயிலகம் நாடு முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி சிறை அதிகாரிகளின் ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கும். கல்வி என்பது வலிமை வாய்ந்த ஆயுதமாகும். சிறையில் உள்ளவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
அனைத்து சிறைகளிலும் மின்னணு சிறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் வருபவா்கள், வெளியே செல்பவா்கள் என அனைவருக்கும் தனித்தனி அடையாள முகவரி உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இதனால் ஆவணத்தில் திருத்தம் செய்யவோ, நீக்கவோ முடியாது.
ஒரு சிறைக்குள் எத்தனை கைதிகள் உள்ளனா், யாா் வெளியில் சென்றுள்ளனா், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள் யாா் என அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். தவிர, இது உச்சநீதிமன்றம், மத்திய புலனாய்வு செயலகத்துக்கு குற்ற வழக்குகள், குற்றவாளிகள் குறித்து தகவலை பரிமாற்றம் செய்ய பயனுள்ளதாக அமையும்.
எனவே, சிறை அதிகாரிகள் அனைவரும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். கைதிகளுக்கு வழங்கப்படுவதே சிறை தண்டனைதான். அதனை அனுபவிக்கத்தான் அவா்கள் சிறைக்கு வருகின்றனா். அவ்வாறு தண்டனையை அனுபவிக்க விரும் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் மேலும், தண்டனையை அளிக்கக்கூடாது என்றாா்.
விழாவில், வேலூா் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், பெண்கள் சிறை கண்காணிப்பாளா் ஆண்டாள், பயிற்சி அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.