சுகாதார சீர்கேடு, கட்டிட இடிபாடு; அச்சத்துடன் படிக்கும் மாணவர்கள்... ஓமந்தூர் அரசு பள்ளியின் நிலை!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசுப் பள்ளி இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. தமிழகத்தின் முன்னாள் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த ஊரான ஓமந்தூரில் அமைந்திருக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 90 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர், ஒன்று சேராத கதவுகள் என திறந்துகிடக்கும் இந்த அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "மாணவர்களின் வகுப்பறைகள் இரு வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது. அதில் ஒன்று மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல் கூரைக்கு கீழே அமர்ந்து தான் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். மாணவர்களுக்கு சரியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட இல்லை. பல வருடத்திற்கு முன்னால் இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவரை சரி செய்யாமலே இப் பள்ளிக்கூடம் இயங்கி வருகின்றது. மழைக்காலம் என்பதால் செடிகளுக்கு நடுவில் உருவாகும் பூச்சி மற்றும் கொசுக்களுடன் மாணவர்கள் அல்லல் பட்டு வருகிறார்கள். இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை பல்வேறு தரப்பினரும் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றனர்.
கூலி வேலைக்கு செல்லலும் பெற்றோர் ஒருவர் கூறுகையில், ``நான் தினமும் காலையில கூலி வேலைக்கு போயிடுவேன். அப்படி கூலி வேலை பார்த்து தான் எனது பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்து படிக்க வைக்கிறேன். பாதுகாப்பா குழந்தைகள் இருக்கணும், நல்லா படிக்கணும்னு தான் ஸ்கூலுக்கு அனுப்புறோம். ஆனா, இங்க ஒரு மதில் சுவர் கூட சரியா இல்ல. இடிந்து விழுந்த மதில் சுவரை சரி செய்யாமலே பல வருஷமா பள்ளி இயங்கி வருகிறது. துரு பிடித்து, வளைந்து விழும் நிலைமையில இருக்கிற முன் கதவு கூட இன்னும் மாத்தாமலே வச்சிருக்காங்க. இந்த நிலைய நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு.." என்றார்.
பள்ளியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கபடுவதாக ஊர் மக்கள் கூறுகையில்,
"இந்த ஸ்கூலுடைய கட்டிடம் எல்லாம் நாங்க படிக்கும்போதே கட்டினது. இப்ப மேல் கூரை எல்லாம் ரொம்பவே சேதமடைந்து இருக்கு. குழந்தைங்க குடிக்கிறதுக்கு தண்ணி வசதி கூட சரியா இல்ல. தண்ணீர் கசப்பு தன்மையோட இருக்கிறதுனால வீட்டில் இருந்தே தினமும் தண்ணிர் கொடுத்து விடுவோம். அந்த தண்ணீரை தான் காலையில் இருந்து மாலை வரைக்கும் குடிக்கிறாங்க. பாத்ரூம் வசதி கூட இந்த பள்ளியில் இல்லை. யூரின் போகாததுனால குழந்தைகளுக்கு இன்பெக்க்ஷன் எல்லாம் வருது.
காம்பவுண்ட் வசதி சரியா இல்லாததுனால புல் செடி எல்லாம் நிறைய ஸ்கூல சுத்தி முளைச்சிருக்கு. அதனால பூச்சி, நாய் எல்லாம் ஸ்கூலுக்குள்ள வருது. பசங்க போடுற குப்பை ஸ்கூல் பக்கத்திலேயே கொட்டுறதுனால நிறைய கொசுக்கள் உருவாகுது. இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருது. ஒரு நாள் ஸ்கூல்ல நாய் எல்லாம் சேர்த்து கிடந்தது இதெல்லாம் பார்த்து பசங்க ரொம்பவே பயந்துட்டாங்க. இதற்கெல்லாம் காரணம் காம்பவுண்ட் வசதி இல்லாம இருக்கிறது மட்டும்தான்.
ஒரு சில நாள்களில் செடிகளுடன் சேர்ந்து பாம்புலாம் மறைஞ்சுகிட்டு இருக்கும். குழந்தைங்க விளையாடுறப்போ ஏதாவது ஆயிடுச்சின்னா நாங்க என்ன செய்யறது. இப்படி இந்த பள்ளிக்கூடம் இருந்தா நாங்க எந்த நம்பிக்கையில் எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கணும்ன்னு கேட்டுக்கொள்கிறோம் " என்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், "எங்க ஸ்கூல்ல , பசங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்ல. எல்லாரும் நல்லா தான் இருக்காங்க .காம்பவுண்ட் இடிஞ்சு விழுந்து பல வருஷம் ஆகுது தான். நாங்க கவர்மெண்ட் கிட்ட சொல்லி இருக்கோம் .அவங்க விரைவிலே சரி செய்து விடுவார்கள். காம்பவுண்ட் வேணும்னு எழுதி கொடுத்து இருக்கோம். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலரை CEO தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது,
"ஓமந்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் மற்றும் போர்வெல் வசதி உண்டு . தண்ணீர் குறித்த பிரச்னைகள் இருந்தால் ஆர்.ஓ வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செடி கொடிகளை அகற்ற ஓமந்தூர் அரசு பள்ளியை BDO கவனத்திற்கு கொண்டு சென்று அப்பள்ளியினை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
ஓமந்தூர் பள்ளியை குறித்து DEO மற்றும் BEO வுடன் கலந்துரையாடிவிட்டு தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிப்பதாக கூறிய சில மணி நேரத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ``ஓமந்தூர் பள்ளியின் சுற்றுசுவரானது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் 200 மீட்டர் தேவை உள்ளது. அதற்கான விண்ணப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
சுத்தத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளியே இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருக்கிறது. பாதுகாக்க வேண்டிய மதில்சுவரும் பாதியிலேயே இடிந்து விழுந்து இருக்கிறது. அரசு பள்ளியின் தரம் மேம்படுமா?