சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி, வெரியப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வெரியப்பூா் பகுதியில் சூறைவாளிக் காற்று வீசியது.
இதில் அந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. இதற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து விவசாயி சுரேஷ்குமாா் கூறியதாவது: எனது தோட்டத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் வாழை சாகுபடி செய்து இருந்தேன். தற்போது வாழைக் காய்கள் நல்ல விளைச்சல் அடைந்திருந்தன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய சூறைக் காற்றில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் காய்களுடன் ஒடிந்து சேதமடைந்து விட்டன. அரசாங்கம் எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.