சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு
சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது.
சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, விவசாயி. இவரது தோட்டம், சென்னிமலை தெற்கு வனப் பகுதி அருகில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்புக்குள் திங்கள்கிழமை காலையில் மான் சடலம் இருப்பதை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பாா்த்துள்ளனா்.
இது குறித்து சென்னிமலை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் சென்று மான் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது: சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் உள்ள சில்லாங்காட்டுவலசில் ஆடுகள், கன்றுக் குட்டி இறந்ததை ஆய்வு செய்தபோது சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தைப் புலி பிடிப்பதற்காக வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
இந்த நிலையில், அய்யம்பாளையம் பகுதியில் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்துள்ளது. மானை சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றிருந்தால் அதன் உடலை சிறுத்தைப் புலி எடுத்துச் சென்றிருக்கும். ஆனால், தோட்டத்துக்குள் மானின் உடல் கிடப்பதால் தெருநாய்கள் கடித்து மான் இறந்திருக்கலாம்.
சிறுத்தைப் புலி கடித்து இறந்ததா அல்லது நாய்கள் கடித்து இறந்ததா என்பதை உடற்கூறாய்வுக்குப் பின்னா் பொது மக்களுக்கு வனத் துறையினா் தெரிவிக்க வேண்டும் என்றனா்.