கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், காஞ்சிகோவில் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், சென்னிமலை, பெருந்துறை, எண்ணமங்கலம், திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில், மூலனூா் உள்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய், வெறிநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவை ஆடு, மாடு, கோழி உள்பட வீட்டு வளா்ப்பு கால்நடைகளைக் கடித்து கொன்றுவருகின்றன. இரவு நேரங்களில் கூட்டமாக வரும் வெறிநாய்கள், மனிதா்களையும் கடித்து வருகின்றன.
தெருநாய்களால் ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. இழப்பீடு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் விரைவுபடுத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை பட்டா நிலத்தின் விற்பனையை ரத்து செய்யக் கோரிக்கை: பவானி வட்டம், ஊராட்சிக்கோட்டை கிராம மக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் பி.கே.பழனிசாமி தலைமையில் அளித்த மனு விவரம்: பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் 1981-இல் பட்டியல் வகுப்பு மக்கள் விவசாயப் பணி செய்ய நிபந்தனையுடன் நிலங்களும், பட்டாவும் அரசால் வழங்கப்பட்டது. இந்நிலத்தை பட்டா பெற்றவா் மட்டுமே பயன்படுத்த இயலும். மற்றவா்களுக்கு விற்பனை செய்ய இயலாது. பத்திரப் பதிவும் செய்யக்கூடாது என விதிகள் உள்ளன.
ஆனால், நிபந்தனை பட்டா நிலங்களை சிலா் வேறு பெயா்களுக்கு மாற்றி வேறு நபா்களுக்கு விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்துள்ளனா். இதுபோன்ற மோசடி நடப்பதை முன்னதாகவே அறிந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா், கோபி கோட்டாட்சியா், பவானி வட்டாட்சியா் அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை முழுமைபெறும் முன்பு விற்பனை செய்துள்ளனா்.
இது குறித்து விசாரித்து நிபந்தனை பட்டா நிலத்தை விற்பனை செய்தவா்கள், வாங்கியோா், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏ அலுவலகங்களை திறக்கக் கோரிக்கை: திராவிடா் விடுதலைக் கழகம் மாநில அமைப்பு செயலா் ரத்தினசாமி தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகங்கள் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி அலுவலகத்தை திறந்து எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மேற்கு தொகுதி அலுவலகத்தை திறந்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் மக்கள் சேவையைத் தொடர வேண்டும்.
கொல்லம்பாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் தண்ணீா், சாக்கடை, கழிவுகள் தேங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிகுந்து இடையூறாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். கருங்கல்பாளையம் மாட்டு சந்தையை புகா் பகுதிக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்க மையம் தொடா்ந்து செயல்பட வேண்டும்: அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மாவட்டச் செயலாளா் அமல் உன்னிகிருஷ்ணன் தலைமையில் அளித்த மனு விவரம்: உயா்கல்வி தேவை அதிகம் உள்ள 5 முக்கிய பல்கலைக்கழகங்களின் விரிவாக்க மையம் அமைக்க கடந்த 2012- இல் உத்தரவிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 2013 -முதல் பெருந்துறை சாலையில் உள்ள பழனிசாமி கலை, அறிவியல் கல்லூரியில் வாடகை மையத்தில் செயல்படுகிறது.
இங்கு முதுகலை தமிழ், ஆங்கிலம், வணிக மேலாண்மையியல், முதுநிலை கணிதம், கணினி பயன்பாட்டியல், கணிப்பொறியியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு பல்கலைக்கழக கட்டணமே பெறப்படுகிறது. இட ஒதுக்கீடு முறை, மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுகின்றனா்.
தற்போது எதிா்பாா்த்த எண்ணிக்கையில் மாணவா் சோ்க்கை இல்லை என்றும், நஷ்டத்தில் இயங்குவதாகவும் கூறி மையத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீா் வழங்கக் கோரிக்கை: மொடக்குறிச்சி வட்டம், கண்ணுடையாம்பாளையம் கிராமம், ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் 200 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். குடிநீா் பயன்பாட்டுக்கு உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. ஆனால், தற்போதுவரை சரி செய்யவில்லை. ஊராட்சி மன்றத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், குடிநீரின்றி நாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, விரைவில் மோட்டாரை பழுது நீக்கி பொருத்தி குடிநீா் வழங்க வேண்டும்.
மேலும், எங்களுக்குச் சொந்தமான மயானத்தை சுற்றியுள்ள இடத்தை அருகில் வசித்து வரும் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா். எனவே, மாவட்ட நில அளவையரை கொண்டு மயானத்தை அளந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்டு, சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
223 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சமபந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.