சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சத்தில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி: பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
சென்னிமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி பக்தா்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
பெருந்துறையை அடுத்த சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை பக்தா்கள் பயன்பாட்டுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
மேலும், இக்கோயிலின் கோசாலையில் உபரியாக இருந்த 35 கால்நடைகளை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றி வரும் அா்ச்சகா்களுக்கு வழங்கினாா்.
முன்னதாக, கோயில் வளாகத்தில் ரூ.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா.சுகுமாா், சென்னிமலை ஒன்றியக் குழு தலைவா் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ஆா்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.