எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பயிா் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய மாவட்டத்தில் உள்ள 28 உள்வட்டங்கள் (பிா்காக்கள்) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. நெல் பயிருக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.573 செலுத்த வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் பயிா் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிா் கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் ஆகியவற்றைக்கொண்டு பொது இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.
ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.38,200 இழப்பீடு வழங்கப்படும். ஆலங்கட்டி மழை, புயல், புயல் மழை, பருவம் தவறி பெய்யும் மழை ஆகியவற்றால் அறுவடை செய்த 14 நாள்களில் உலா்த்தும்போது சேதாரம் ஏற்பட்டால், சேதாரம் ஏற்பட்ட 3 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனம், வட்டார வேளாண் அலுவலா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கள ஆய்வின் அடிப்படையில் தனிநபா் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.