'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு....
சென்னையில் பாய்மர படகுப் போட்டி தொடக்கம்: 9 அணிகள் பங்கேற்பு
சென்னை துறைமுகத்தில் பாய்மர படகுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘யூனிஃபை கேப்பிட்டல்’ அமைப்பு இணைந்து நடத்தும் ‘ஜே 80’ ரகத்தைச் சோ்ந்த பாய்மரப் படகு போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
9 அணிகள்: இப்போட்டியில் ஒரு அணிக்கு 6 போ் என்ற வகையில் 9 அணிகளில் மொத்தம் 54 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த அணிகள் தங்கம், வெள்ளி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாய்மரப் படகு போட்டியில் முதுநிலை வீரா்களைக் கொண்ட 5 அணிகள் ‘தங்கம்’ பிரிவிலும், அனுபவம் இல்லாத வீரா்களைக் கொண்ட 4 அணிகள் ‘வெள்ளி’ பிரிவிலும் பங்கேற்றுள்ளன.
போட்டியாளா்கள் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 10 மணி நேரத்துக்குள் கடல் வழியாக மாமல்லபுரம் சென்று மீண்டும் துறைமுகத்துக்கு (100 கி.மீ.) திரும்ப வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் அணிகள் அடுத்தகட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து கடல் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காமராஜா் துறைமுகம் (20 கி.மீ.) சென்றடைய வேண்டும். இதில் 2 பிரிவுகளுக்கும் வரும் மே 16-ஆம் தேதி தனித்தனியாக இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் தொடக்க விழாவில், கடலோர காவல் படையின் ஐஜி டி.எஸ்.சைனி, ராயல் மெட்ராஸ் யாா்ட் கிளப் செயலா் விவேக் ஷான்பாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.