பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
சென்னை: அரசு மருத்துவமனையில் பண மோசடி - அதிகாரிகள் சிக்கிய பின்னணி!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்திருப்பதாக மருத்துவமனையின் முதல்வருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவமனை தரப்பில் அந்த வளாகத்தில் செயல்படும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பண மோசடி நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அதிகாரிகளாக பணியாற்றும் குபேரன், கலைமகள் ஆகிய இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது நோயாளிகள் கொடுக்கும் பணத்துக்கு ரசீது கொடுத்தாலும் மருத்துவமனையின் பதிவேட்டில் குறைவாக தொகையை குறிப்பிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குபேரன் (50), ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த கலைமகள் (44) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவசமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதே நேரத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தத் தொகையில்தான் மோசடி நடந்திருக்கிறது. வெளிமாநில நோயாளிகளிடமிருந்து பெறப்படும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக குபேரனும் கலைமகளும் கையாடல் செய்து வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் நோயாளி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட ரசீதில் உள்ள தொகைக்கும் மருத்துவமனை பதிவேட்டில் உள்ள தொகையிலும் வேறுபாடு இருப்பதை அந்தப் பிரிவில் உள்ள சிலர் கண்டுபிடித்து மருத்துவமனையின் டீன் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட ரசீதையும் ஆய்வு செய்தபோதுதான் இந்த மோசடி தெரியவந்தது. இவர்கள் இருவரும் எவ்வளவு தொகை மோசடி செய்தார்கள் என விசாரித்து வருகிறோம்" என்றனர்.