சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!
விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையிலும், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக விழுப்புரம் நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மேலும் நகரின் பல்வேறு விரிவாக்கப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால், அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவைச் சேர்ந்தோர் படகுகள் மூலம் சென்று மீட்டனர்.
இதனிடையே, சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், சித்தனி அருகே சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வெள்ள நீர் சூழந்ததால், இன்று காலைமுதல் ஒருவழியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், சுமார் 5 கி.மீ.க்கு மேல் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கியது.
இதனிடையே, சித்தனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் என அனைத்து அந்தந்த இடங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.
தற்போது வெள்ள நீர் குறைந்த குறையத் தொடங்கியுள்ளதால், சில மணிநேரத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது.
ரயில் சேவை பாதிப்பு
சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளநீர் அபாயகக் கட்டத்தில் செல்வதால் பல்வேறு ரயில்களின் சேவையை ரயில்வே துறை திங்கள்கிழமை ரத்து செய்தது.
நாகர்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில்(வ.எண்.06012) விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. இதுபோல திருச்சியிலிருந்து முற்பகல் 11 மணிக்குப் புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் (வ.எண். 22676), நாகர்கோவிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில்(வ.எண். 20628), மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில் (வ.எண்.22672), சென்னையிலிருந்து பிற்பகல்1.50 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவிரைவு ரயில் (வ.எண்.12635"), சென்னையிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடி வரை செல்லும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (வ.எண்.12605), சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு திருநெல்வேலிக்குப் பறப்பட்டுச் செல்லும் வந்தே பாரத் ரயில் (வ.எண்.20665) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதையும் படிக்க : விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து!! உதவி எண்கள்!
நாகர்கோவிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு விழுப்புரத்துடன் ரயில் நிறுத்தப்பட்டதால், அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் விழுப்புரத்தில் இறக்கிவிட்டப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும் சென்றனர். மேலும் பொதுமக்கள் பலர் நடந்தும் சென்றனர்.
பல்வேறு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால், விழுப்புரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக வந்த பயணிகள் சாலை வழியாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.