விழுப்புரம்: வெள்ள பாதித்த பகுதிகளில் துணை முதல்வா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள சூழப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
தெற்கு வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் சனிக்கிழமைத் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்தது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம், கோட்டக்குப்பம், வானூா், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடானது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பியன.
இந்த நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளம் பாதித்த மரக்காணம், திண்டிவனம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மரக்காணத்தில் உள்ள புயல் பேரிடா் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, திண்டிவனம் நல்லியக்கோடான் வாய்க்கால் அருகே மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆகியோா் உடனிருந்தனா்.