சென்னை: விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி!
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகினர்.
மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை 5 மாணவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றுகொண்டிருந்த கண்டெயினர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன்புறம் அமர்ந்திருந்த தானேஸ் ரெட்டி மற்றும் ஸ்ரேயர்ஸ் ஆகிய இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்புறம் அமர்ந்திருந்த மாணவர் முகமது, மாணவிகள் உமா மற்றும் ஹரிணி ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மீட்கபட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தாம்பரம் பெருநகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.