இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வெடிகுண்டு வடிவில் மா்மப் பொருள்: போலீஸாா் ...
சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி - ஆசிரியை கைது
சென்னையைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `தனக்குத் தெரிந்த பெரம்பூரைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை சிவசங்கரி என்பவர் ஆசிரியர் வேலைக்கு ஏழு லட்சம் ரூபாயும் , அலுவலக உதவியாளர் வேலைக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். அதை உண்மையென நம்பி நான், எனக்குத் தெரிந்தவர்களிடம் ஆசிரியர், அலுவலக உதவியாளர் வேலைக்காக 25 லட்சம் ரூபாயை வசூலித்து ஆசிரியை சிவசங்கரியிடம் கொடுத்தேன். பின்னர், வேலைக்கான நியமன ஆர்டர்களையும் சிவசங்கரி கொடுத்தார். ஆனால் அந்த நியமன ஆர்டர் போலி எனத் தெரியவந்தது.
அதனால் வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அதை அவர் தரவில்லை. எனவே பணத்தை திரும்ப தருவதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியை சிவசங்கரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் சிவசங்கரி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ஆசிரியை சிவசங்கரி, 5 பேருக்கு போலி பணி நியமன ஆர்டர் வழங்கியதும் மேலும் ஆறு பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியிருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சிவசங்கரியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவசங்கரியிடமிருந்து வழக்குக்குத் தேவையான ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என்றும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.