செய்திகள் :

செம்மீன் - கடல் அன்னையின் கோபம் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

நூல்: செம்மீன்

எழுத்து: தகழி சிவசங்கரப் பிள்ளை

மூலம்: மலையாளம்

தமிழாக்கம்: சுந்தர ராமசாமி 

வெளியீடு: சாகித்திய அகாதமி 

எழுத்தாளர் தகழி:

கேரளாவின் ஆலப்புழைக்கு அருகே உள்ள 'தகழி' என்னும் சிற்றூரில், 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவர் தகழி சிவசங்கரப்பிள்ளை. இவர் மலையாள இலக்கிய உலகில், தவிர்க்க முடியாத ஓர் எழுத்தாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும், ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

சிறு வயதிலேயே புத்தகங்களின் மீது ஆர்வம் கொண்ட இவர், ரஷ்ய இலக்கியங்களை விரும்பி படித்திருக்கிறார். இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவருடைய எழுத்துக்கள், மக்களிடையே முற்போக்குச் சிந்தனைகளை விளைத்தன.

'தியாகத்தினு ப்ரதிபலம்' என்னும் தன்னுடைய முதல் நாவலை எழுதியபோது, இவருடைய வயது வெறும் இருப்பது இரண்டு மட்டுமே! 'பதித்த பங்கஜம்', 'சுஷீலம்', 'தோட்டியுட மகன்' போன்ற நாவல்களை எழுதிப் புகழ் பெற்ற இவருக்கு, 'செம்மீன்' சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. 

செம்மீன் நாவல்

செம்மீன், 1956 ல் வெளியான நாவல். கேரள மீனவர்களின் வாழ்க்கையை, ஒரு மெல்லிய காதல் கதையோடு இணைத்து இவர் எழுதிய இந்நூல், இந்திய இலக்கியங்களுள் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுடைய நம்பிக்கைகளையும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்யப்பட்டதே இந்நாவலின் சிறப்பு! 

ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ரஷ்யா உள்ளிட்டப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இந்நாவலை, தமிழில் சுந்தர ராமசாமி சிறந்த மொழி நடையில் மொழிபெயர்த்துள்ளார். 

கதைச் சுருக்கம்:

பரந்து விரிந்து ஓயாமல் எந்நேரமும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் கடலுக்கு அருகே நின்றபடி, பரீக்குட்டியும் கருத்தம்மாவும் காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பால்ய வயதிலிருந்தே அவர்கள் இருவரும் நண்பர்கள். நட்பு காதலாக மாறி இருந்தது, அவர்கள் இருவருக்குமே நன்கு தெரியும்.

ஆனால் அவர்களுடைய மதம், இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது. ஆம்! பரீக்குட்டி, அக்கடல் கிராமத்தில் வாழும், ஓர் சிறிய இஸ்லாமிய வியாபாரி. அதே கிராமத்தில் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த செம்பன்குஞ்சு மற்றும் சக்கி தம்பதியின் மூத்த மகள் தான் கருத்தம்மா. 

இவர்களுடைய காதல் விஷயம், சக்கிக்கு நன்றாகவே தெரியும். அவள் கருத்தம்மாவை மறைமுகமாகவும், நேரடியாகவும் பலமுறை கண்டிக்கின்றாள். கருத்தம்மாவின் இயல்பான உணர்ச்சிகளுக்கு, மதம் ஒரு தடையாக இருக்கிறது. மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் வெளிப்படுத்த முடியாமல் அவற்றை நெஞ்சோடு புதைத்து வைக்கிறாள்.

சித்தரிப்புப் படம்

செம்பன்குஞ்சுவின் எண்ணமெல்லாம் சொந்தமாக ஒரு படகும் வலையும் வாங்க வேண்டும் என்பதே. எண்ணம், ஆசையாக மாறுகிறது. ஆசை, பேராசையாகிறது. படகும் வலையும் வாங்கப் போதுமான பணம் இல்லாதபோதும், அவற்றை எப்படியாவது வாங்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப் படுகிறான் செம்பன்குஞ்சு. இதற்காகப் பரீக்குட்டியிடம் கடன் கேட்கிறான்.

பரீக்குட்டியும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செம்பன்குஞ்சுவுக்கு பண உதவி செய்கிறான். அப்பணத்தைக் கொண்டு, சொந்த படகும் வலையும் வாங்கும் செம்பன்குஞ்சு, பரீக்குட்டி செய்த உதவியை காலப்போக்கில் மறக்கிறான்‌. பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்துகிறான் செம்பன்குஞ்சு. ஆனால் பரீக்குட்டிக்கு அதைப் பற்றிய கவலைகள் ஏதும் இல்லை‌. கருத்தம்மாவுக்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவே இருக்கிறான். 

இந்நிலையில், வேறு ஊரைச் சேர்ந்த மீனவனான பழனி என்பவனை கருத்தம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். கருத்தம்மாவின் காதல் பற்றி தெரியாமலே அவளை மணந்து கொள்கிறான் பழனி. ஆனால், விரைவிலேயே அவள் பரீக்குட்டியைக் காதலித்த விஷயம் பழனிக்குத் தெரியவருகிறது. இருந்தும் கருத்தம்மாவை அவன் நம்புகிறான். புதிய வாழ்க்கையை அவர்கள் வாழத் தொடங்குகிறார்கள். இதன்பிறகு, அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே மீதிக் கதை.

ஆலப்புழையை ஒட்டியிருக்கும் நீர்க்குன்னம் மற்றும் திருக்குன்றப்புழை என்கிற கடல் கிராமத்தைச் சுற்றியே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. மீனவ சமூதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் இரண்டு விஷயங்களைப் பற்றியே அழுத்தமாக இந்நாவல் பேசுகிறது.

1. மீனவர்களின் நம்பிக்கைகளையும் மரபுகளையும்.

2. அவர்களிடத்தில் இருந்த சாதி மத பாகுபாடுகள்.

நம்பிக்கைகளும் மரபுகளும்:

அம்மக்கள் கடலை, தெய்வமாகவே பார்க்கின்றனர். கடலுக்கு, 'கடலம்மா' எனும் பெயரை வைத்து வழிபடுகின்றனர். கடலுக்குள் செல்கின்ற மீனவனின் உயிர், ஒழுக்கம் தவறாது கரையில் வாழும் அவனுடைய மனைவியிடம் தான் இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

அதாவது கணவன் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும்போது, கரையில் இருக்கும் அவனுடைய மனைவி, அவளுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கடலம்மாவின் கோபத்திற்கு ஆளாகி ஒட்டுமொத்த கிராமமும் அழிந்து போய்விடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அப்படி வழித்தவறிப் போன ஒருவளால், இதற்கு முன்பே ஒருமுறை அக்கிராமம் அழிவை சந்தித்திருக்கிறது என்கிற கதையும் அவர்களிடத்தில் பிரபலமான ஒன்று.

சித்தரிப்புப் படம்

நாவலின் ஓர் இடத்தில் இடம்பெறும் வரிகள் இவை:

'கடலுக்குச் செல்லுகிற முக்குவனின் உயிர், கரையில் இருக்கும் முக்குவத்தி கையில் தான் இருக்கிறது'

ஆக, ஒரு சமூதாயத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் (மூடநம்பிக்கை) ஒரு பெண்ணின் உடல் மீது வைக்கப்படுகிறது. அதாவது ஒரு பெண்ணின் உடலை வைத்தே ஒரு சமூகம் இயங்குகிறது!

நாவல் முழுக்க வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனிதர்கள், கருத்தம்மாவிடம் இதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், இயல்பான அவளுடைய உணர்ச்சிகளும் கடல் காற்றோடு கரைந்து காணாமல் போகின்றன. இதன் மூலம் பெண்களின் அன்றைய நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம். 

கடலை, 'கடலம்மா' என தெய்வமாக வழிபடும் மக்களால், ஒரு பெண்ணை, பெண்ணாகக் கருத முடியவில்லை!

சாதியும் மதமும்:

இந்நாவல், இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் எழுதப்பட்டது. அக்காலத்தில் மக்களிடையே இருந்த சாதிமத வேற்றுமைகள் பற்றி நாம் அறிந்ததே. அதை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.

'நாலாம் மதத்துக்காரன் எவனாவது கெடுத்துவிட்டுப் போய் விடுவான்' என ஆரம்பத்தில் கருத்தம்மாவை சக்கி எச்சரிப்பதும், உயிர் பிரியும் வேளையில் கூட,', இனி நீ கருத்தம்மாவை அண்ணன் போல கூடவே இருந்து பாத்துக்கனும்' என பரீக்குட்டியிடம் சக்கி கேட்டுக் கொள்வதும், அம்மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக சாதி வேரூன்றி இருக்கிறது என்பதை உணரலாம்.

மீனவச் சமூதாய மக்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஏதோ ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். இதை நாவலில் வரும் ராமமூப்பன் என்கிற கதாபாத்திரம் இப்படி விளக்குகிறது. 

சித்தரிப்புப் படம்

'சாதி பிரிவுகள்... அரயன், வலைஞன், முக்குவன், மரக்கான். இவர்களில் வலைஞன் மட்டும்தான் தோணியும் வலையும் வாங்கலாம். அவர்களுக்கு மட்டும தான் துறை அரையன் அவ்வுரிமையை வழங்குவார்'

இதிலிருந்து மீனவச் சமூதாய மக்களின் உட்பிரிவுகள் பற்றியும், அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் அறியலாம். 

செம்பன்குஞ்சு ஓர் முக்குவன். எனவே அவனுக்குச் சொந்தமாக ஒரு படகும் வலையும் வாங்கும் உரிமை இல்லை‌. அதையும் மீறி அவன் வாங்க நினைத்தால், அதை துறை அரையனிடம் சொல்லிவிட்டுத் தான் வாங்க வேண்டும். அதுமட்டுமல்ல, எந்த ஒரு காரியத்தையும் துறை அரையனிடம் ஊர் மக்கள் சொல்ல வேண்டும். தவறினால் அவர்களுக்குக் கடலுக்குள் செல்லும் உரிமை, பறிக்கப்படும். துறை அரையன், அதே ஊரில் வாழும் உயர் சாதி மீனவ சமூதாயத்தைச் சேர்ந்தவன்.

நாவலின் இரண்டாம் பாதியில் வரும் பாப்பிக்குஞ்சுவிடம் (செம்மன்குஞ்சுவின் இரண்டாவது மனைவி) கூட இந்த சாதிப்பாகுபாடை கண்டறியலாம். 

அவ்வளவு ஏன்? சொந்தங்களே இல்லாத அநாதையான பழனிக்கு, கருத்தம்மாவை திருமணம் செய்து வைத்ததன் பிண்ணனியில் கூட சாதி தான் இருக்கிறது. 

பரீக்குட்டியிடம் கைநீட்டிக் கடன் வாங்கத் துணியும் செம்பன்குஞ்சுவுக்கு, தன் பெண் கருத்தம்மாவை அவனிடம் ஒப்படைக்கத் துணிவு இல்லை‌.

பழனி ஒரு இடத்தில், 'நீ ஒரு மீனவ சமூதாயத்தைச் சேர்ந்த பெண் தானே? அப்பறம் எதுக்கு அந்த முஸ்லிம் பையன் கூட சின்ன வயசுல இருந்து பழகின?' என்பான். விவரம் தெரியாதவன் என அறியப்படும் பழனிக்கே இந்த எண்ணம் தான் இருக்கிறது. 

இப்படி நாவல் முழுக்க, சாதி மதம் பற்றிய ஏற்றத் தாழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சமூகம்:

மேலே குறிப்பிட்டுள்ள மூடநம்பிக்கைகள் யாவும், அவர்களின் கலாச்சாரத்தோடு கலந்துவிடுவது தான், நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். 

மூடநம்பிக்கைகள், மக்களின் கலாசாரத்தோடு கலந்து விட்டால் அந்நாடு முன்னேறாது!

இன்றும் இது போன்ற நம்பிக்கைகள் கொண்டவர்கள், எல்லா மதங்களிலும் எல்லா சாதிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மீனவர்கள் சமூதாயத்தில், அவர்களுடைய குடும்ப முன்னேற்றத்துக்குப் பெண்களின் பங்கு மிகப்பெரியது. பிடிபடும் மீன்களைக் கூடையில் வைத்து, வீதி வீதியாக சென்று விற்பதன் மூலம் குடும்பம் நடத்தத் தேவையான பணம் அவர்களுக்குக் கிடைக்கிறது. இதை அவர்கள் பெருமையாகவும் கடமையாகவும் நினைக்கிறார்கள்.

விருப்பம் இல்லாத திருமணம் செய்தும் கூட, கருத்தம்மா தன்னுடைய கடமையில் இருந்து விலகவில்லை. சிறிது நாட்களிலேயே எல்லாவற்றையும் மறந்து, பழனியுடன் அவளால் குடும்பம் நடத்த முடிகிறது. இதன் மூலம், தான் ஒரு முக்குவத்தி (மீனவர்களின் சாதி உட்பிரிவு) என்ற அடையாளத்தை அவள் காத்துக் கொள்கிறாள். 

ஆனால், தொடர்ந்து இந்தச் சமூகம் அவள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'இவள் கெடுப்போனவள்' என்ற அடையாளத்துடன் தான் நாவல் முழுக்க அவள் பயணம் செய்கிறாள். 

அதன் விளைவு தான், நாவல் முடிவில் அவள் எடுக்கும் முடிவு! 

சித்தரிப்புப் படம்

கடலம்மாவின் கோபம்:

மொத்த நாவலையும் ஒரு குறுக்கு வெட்டு கோணத்தில் பார்த்தால், ஒரு பெண்ணினுடைய கற்பு பற்றியே முதன்மையாக பேசப்படுகிறது.

தகழியின் எழுத்துக்களை ஆராய்ந்த கே. எம்‌. ஜார்ஜ், செம்மீன் நாவலை முன்னிலைப்படுத்தி, 'கற்பு என்றால் என்ன? அதன் வரையறைகள் என்ன?' என்று கேள்வி எழுப்புகிறார். 'கணவரிடத்தில் விசுவாசமாக இருப்பது கற்பா? அல்லது காதலனிடம் விசுவாசமாக இருப்பது கற்பா?' என கேட்கும் இவர், பெண்கள் தங்களது உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமல் செயற்கையாக வெளியில் நடிக்கிறார்கள் என்கிறார். 

ஒரு முற்றபோக்கு எழுத்தாளர் என அறியப்படும் தகழி, ஒரு சமூகத்தின் மூடநம்பிக்கைக்குத் துணை போகும் விதமாக நாவலின் முடிவை அமைத்திருப்பது அதிர்ச்சியே!

இந்நாவல் 1965 ஆம் ஆண்டு, ராமு கார்யாட் இயக்கத்தில் இதே பெயரில் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியடைந்தது. சிறந்த திரைப்படத்திற்கான தென் இந்தியாவின் முதல் தேசிய விருதை வென்றது. 

இதில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல்களின் மூலம், செம்மீன் உலகம் முழுக்கப் பரவியது. சிவில் செளதிரி இசையில்,'மானசமைனே வரூ','கடலினக்கரெப் போணோரே' போன்ற பாடல்கள், காலத்தால் அழியாதது.

கருத்தம்மாவாக ஷீலாவும், பரீக்குட்டியாக மதுவும் நடித்திருந்தனர். பின்னாளில் இந்தப்படமே அவர்களுடைய அடையாளமாக மாறிப்போனது.

இந்நாவலை படித்து முடித்தவுடன் ஒரே ஒரு எண்ணம் தான் என் மூளைக்குள் ஓடியது. இத்தனை மரபுகளையும், நம்பிக்கைகளையும், சாதி மத பாகுபாடுகளையும் அமைதியாக இந்தக் கடல், பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களின் மூடநம்பிக்கைகளை அதன் மீதே கிடத்தி, அதனையே பலி கிடா ஆக்குவதால் தான் என்னவோ சுனாமியாக வந்து நம்மை வாரிக் கொண்டு சென்றுவிட்டது. 

எல்லோரும் சொல்லியது தான். மீண்டும் சொல்கிறேன்:

'இயற்கையின் முன்பு, நாம் ஓர் சிறு துகள்'

-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

`கொலை நகரமான டீ எஸ்டேட்’ : எரியும் பனிக்காடு புத்தக பின்னணி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வாய்மை எனப்படுவது யாதெனின்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு - இவரது நூல்களும்.. விருதுகளும் ஒரு பார்வை!

இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைதமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தி இன்று காலை வெளியானது. பண்பாட்டு ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், நாவல்கள், இலக்கிய ஆய்வுக... மேலும் பார்க்க

"அம்மா சந்தேகப்பட்டு கதவைத் தட்ட அப்பா திறக்கவே இல்ல" - இந்திரா செளந்தர்ராஜன் மகள் வேதனை #Exclusive

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் என்றாலே விடாது கருப்பு, மர்ம தேசம், இறையுதிர்க்காடு என அவருடைய அமானுஷ்யக்கதைகளும், ஆன்மிகக்கதைகளும்தான் நம் அனைவருடைய நினைவுக்கும் வரும்.இரண்டு நாள்களுக்கு முன்னால், 6... மேலும் பார்க்க

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு - மதுரை மக்களும், வாசகர்களும் அதிர்ச்சி!

பிரபல எழுத்தாளரும், ஆன்மிக பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் திடீரென மரணமடைந்த சம்பவம், மதுரை மக்களுக்கும் வாசகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'மர்மதேசம்'சேலத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரையி... மேலும் பார்க்க