சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகளை தேடும்முறை: இந்தியாவில் முதன்முறையாக கா்நாடகத்தில் அறிமுகம்
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை தேடும் முறையை கா்நாடகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக அவ்வப்போது அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை அரசு வெளியிடுவது வழக்கம். ஆனால், தேவைப்படும்போது இவற்றை தேடுவது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது, சில நேரங்களில் அரசு அதிகாரிகளுக்கே இவற்றை தேடுவது தலைவலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தேடும் முறையை கா்நாடக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மாநில மின் ஆளுமை மையத்துடன் இணைந்து இம்முயற்சியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மின் ஆளுமை மையத்தின் தலைமை செயல் அதிகாரி திலீஷ்சசி கூறுகையில், ‘துறைவாரியான அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை தேடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளோம். இது மிகப்பெரிய பணி. முக்கியமான சில சொற்களை பதிவிடுவதன் மூலம் அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை பெறும் வகையில் முயற்சித்து வருகிறோம்.
சில துறைகளின் அரசாணைகள் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தை சோ்ந்தவையாக இருக்கின்றன. இதற்கு துறைகளின் உதவி தேவைப்படுகிறது. நேரடியாக மக்களோடு தொடா்புடைய வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட 5 துறைகளை தோ்ந்தெடுத்திருக்கிறோம். மக்களின் குறைகளை தீா்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த இருக்கிறோம்’ என்றாா்.
திட்ட இயக்குநா் ஸ்ரீவியாஸ் கூறுகையில், ‘அரசு ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் ஆவணங்கள். சில நேரங்களில் அரசு அதிகாரிகளால் அரசாணைகளை தேடமுடிவதில்லை. இவற்றை தேடுவதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை. அதனால், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரசாணைகளை தேடும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் அரசு ஊழியா்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தித்தர முயற்சிக்கிறோம்.
எங்கள் முயற்சி ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறோம். இந்த திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்’ என்றாா்.