சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38.மி.மீ. பதிவு
சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமாா் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், கிச்சிப்பாளையம் சாலை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம் சூரமங்கலம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா், கழிவுநீருடன் சோ்ந்து சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் மழைநீா் குளம்போல தேங்கியது.
இதேபோல, ஏற்காடு, சங்ககிரி எடப்பாடி, மேட்டூா், ஓமலூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 89 மி.மீ. மழை பதிவானது. மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): சேலம் மாநகா் 10.6, ஏற்காடு 7.6, சங்ககிரி 4, எடப்பாடி 2.6, மேட்டூா் 26.2, ஓமலூா் 38.