சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!
சேலம்: துணை மேயர் வீட்டில் கொள்ளை சம்பவம்; சிசிடிவியில் பதிவான கர்சிஃப் திருடர்கள்.. போலீஸ் விசாரணை!
சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதா தேவி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு வீராணம் காவல் நிலைய எல்லையில் கோராத்துப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வருகிறது. கடந்த 07.01.2025 ம் தேதி இரவு தலையில் குல்லா, முகத்தில் கர்சிஃப், ஜர்க்கின் அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் வாசலில் உள்ள சிசிடிவியை திருப்பி வைத்துவிட்டு பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். அதற்குள் மனிதர்கள் நடமாடும் சத்தம் கேட்டதால், தப்பித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14.01.2025 ம் தேதி பொங்கலன்று இரவும் அதே கோராத்துப்பட்டி கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியபோது, “கிராமப்பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளாக நோட்டமிட்டு ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வருகிறது. அதுவும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தான் எங்கள் பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த கும்பல் சுற்று வட்டாரங்களிலேயே இருந்துகொண்டு, தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் சரிவர ரோந்து பணி மேற்கொள்ளமால் இருந்து வருகின்றனர். புகார் அளிக்க சென்றபோதுகூட ஸ்டேஷனில் போலீஸ் ஸ்ட்ரென்த் போதவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கின்றனர்” என்றனர்.
இதுகுறித்து துணை மேயர் சாரதா தேவியிடம் பேசியபோது, “சம்பவம் நடந்தது உண்மைதான். இது தொடர்பாக வீராணம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
மேலும் வீராணம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதாவிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றோம். விரைவில் திருடனை பிடித்துவிடுவோம்” என்றார்.