சேலம் வழியாக சபரிமலைக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
கச்சக்குடா, ஹைதராபாத்தில் இருந்து சேலம் வழியாக சபரிமலைக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கச்சக்குடா- கோட்டயம் சிறப்பு ரயில் வரும் 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். கச்சக்குடாவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து கச்சக்குடாவுக்கு 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், கோட்டயத்தில் இருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு, 2ஆம் நாள் அதிகாலை 1 மணிக்கு கச்சக்குடாவைச் சென்றடையும்.
அதேபோல் ஹைதராபாத்- கோட்டயம் சிறப்பு ரயில் வரும் 19, 26 ஆகிய தேதிகளிலும், கோட்டயம்- ஹைதராபாத் சிறப்பு ரயில் 20, 27 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இதுதவிர ஹைதராபாத்- கோட்டயம் இடையே 22, 29 ஆகிய தேதிகளிலும், கோட்டயம் - செகந்திரபாத் இடையே 23, 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.