மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது
சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழித் திட்டத்தை (பிஎம் ஸ்ரீ பள்ளிகளை) நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டின் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான) நிதியை வழங்குவோம் என்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பில் தொடங்கிய சர்ச்சையும் விவாதங்களும் மீண்டும் ஒரு மொழிப் போருக்கு வழிவகுத்துவிடுமோ என்கிற அளவில் இன்னமும் நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக எதிர்வினையாற்றிவரும் முதல்வர் மு.க. ஸ்டாலினோ, ஒரு தருணத்தில், ‘மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாக் மெயில் செய்கிறார்’ என்று குற்றம் சாட்டியதுடன், ‘மும்மொழித் திட்டம் என்ற பெயரில் ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் திணிக்கப் பார்க்கிறார்கள். ரூ. (இப்படி எழுதலாம்தானே?) 2 ஆயிரம் கோடி அல்ல; 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் நாசகாரத் திட்டத்தை ஏற்க மாட்டோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உள்ளபடியே ஹிந்தி பேசாத தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகமானோர் ஹிந்தி கற்க விழைந்து தேர்வுகளையும் எழுதுகின்றனர்.
2018-ல் தமிழ்நாட்டிலிருந்து 5.80 லட்சம் பேரும் தெலங்கானா உள்ளிட்ட ஆந்திரத்தில் 2.4 லட்சமும் கர்நாடகத்தில் 60 ஆயிரமும் கேரளத்தில் 21 ஆயிரம் பேரும் தேர்வு எழுதியிருக்கின்றனர் என்று சொல்வது வேறு யாருமல்ல, தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபாவினர்தான். தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல இடங்களில் சபாவின் கிளைகள் செயல்படுகின்றன! (யாரும் எங்கேயும் ஹிந்தி பிரசார சபாக்களை மறிப்பதுமில்லை, கற்போரையும் கற்றுத் தருவோரையும் தடுப்பதுமில்லை, கற்பிக்கும் பள்ளிகளை மூடுவதும் இல்லை).
தமிழ்நாட்டிலிருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா எனப் பெருநகர்களுக்குச் சென்றாலும் குஜராத் உள்பட வெளி மாநிலங்களுக்குச் சென்றாலும், எங்கே செல்கிறார்களோ அந்தப் பகுதியின் மொழிகளைச் சில மாதங்களில் தமிழர்கள் கற்றுக்கொண்டுவிடுகின்றனர். அது மூன்றாவது மொழியா? நாலாவது மொழியா? என்றெல்லாம் யாரும் எண்ணிக்கொண்டிருப்பதில்லை.
நண்பர் ஒருவரின் மகன் ஜெர்மனிக்கு உயர் கல்வி கற்கச் சென்றார். மூன்றே மாதங்களில் சென்னையில் தனி வகுப்பில் சேர்ந்து ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டுதான் புறப்பட்டார். சென்னையிலேயே தெரிந்த அலுவலகமொன்றில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் காவலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், மூன்றாவது தலைமுறையாக! இன்னமும் எல்லாரும் ஆண்டுக்கு ஒருமுறை நேபாளத்துக்கும் சென்றுவந்தாலும் அவர்களின் குழந்தைகள் எல்லாரும் தமிழ்ப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்; நல்ல தமிழும் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேவைப்படுவோர் தங்கள் தேவைக்கேற்ற பள்ளிகளில் சேர்ந்து தேவையான மொழிகளைக் கற்றுக்கொண்டுதானிருக்கிறார்கள், இரு மொழிகள் என்றாலும் சரி, மும்மொழிகள் என்றாலும் சரி. இது எங்கேயும் தடுக்கப்படுவதில்லை.
கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தையொட்டிய தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளிலுள்ள பல பள்ளிகளில் இப்போதும் மும்மொழிகள் – ஆங்கிலம் மற்றும் இரு மாநிலங்களின் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. சென்னை மாநகருக்குள்ளேயே கன்னடம், தெலுங்கு, மலையாளம் கற்பிக்கும் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அல்லாமல், தமிழ்நாட்டிலேயேகூட பல தலைமுறைகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தெலுங்கு, உருது, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பெரும்பாலும் தமிழில்தான் கற்கின்றனர். சிந்திக்கின்றனர், பேசுகின்றனர், வாழ்கின்றனர்.
இந்த லட்சணத்தில் எல்லா பள்ளிகளிலும் ஹிந்தி கற்பித்தேயாக வேண்டும் என்பதற்கான தேவை என்ன இருக்கிறது? எங்கேயிருந்து வருகிறது? எதற்காகப் புதிய கல்விக் கொள்கையின்வழி மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்கிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்? சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற கதைதான்.
ஒருகாலத்தில் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கல்வி, பின்னர் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, இப்போது இரண்டுக்கும் இடையே சிக்கி இழுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட மாநிலங்களின் தேவைகளைப் பொருத்து அவரவர் கல்வியைத் திட்டமிடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களாலும் செலுத்தப்படுகிற வரிப் பணத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்க எதற்காக மத்திய அரசு நிபந்தனைகளை விதிக்கிறது?
ஹிந்தியைப் புழங்க அனுமதித்த பல வட இந்திய மாநிலங்களில் அந்த மாநில, அந்தப் பகுதி மொழிகள் – போஜ்புரி, மைதிலி, அவதி, கர்வாலி, மார்வாரி எனப் பல - அழிந்துவிட்டன அல்லது அருகிவிட்டன. மராட்டி மொழி நகரமான மும்பையே இப்போது ஹிந்தியில்தான் பேசிக்கொண்டிருக்கிறது! ஹிந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே காரணத்தால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாரம்பரியமான - உள்ளூர் பூர்விக மொழிகள் ஊற்றிமூடிக் கொண்டுவிட்டன – தலையை நுழைத்த ஒட்டகம் கூடாரத்தையே வளைத்துப் போட்டதைப் போல.
எல்லா பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்படாததால் தமிழ்நாட்டுக்கு ஒரு அம்மன் சல்லியளவுக்குக்கூட நஷ்டமில்லை. இங்கே தமிழ் – ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே கற்றவர்கள்தான் நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமல்ல; உலகமெங்கும் சென்று பல்வேறு துறைகளில் கோலோச்சுகிறார்கள். வெளிநாடுகளில் மென்பொருள் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் தென் இந்தியர்களே – தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் (வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வணிகம் அல்லது உடலுழைப்பு சார்ந்திருப்பார்கள்). (அதானே, எல்லாம் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு!).
தமிழ்நாட்டுக்காக மும்மொழியை உபதேசிப்பவர்கள், எத்தனை வட மாநிலங்களில் – எத்தனை பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன? எத்தனை பள்ளிகளில் இரு மொழிகள் (தாய்மொழியும் ஆங்கிலமும்) கற்பிக்கப்படுகின்றன? என்ற பட்டியலை வெளியிட முடியுமா? என்று முதல்வர். மு.க. ஸ்டாலின் தொடக்கம் பல தலைவர்களும் கேட்டிருக்கிறார்கள். ஒரு மொழியை – ஹிந்தியைக்கூட – ஒழுங்காகக் கற்பிக்காத பள்ளிகள்தான் ஏராளம் என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதென வட மாநிலங்களில் ஓரளவு வலம்வந்த ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். ஏனெனில் இங்கெல்லாம் இரண்டாவதாக ஆங்கிலம்கூட கற்பிக்கப்படுவதில்லை.
இதற்கு நடுவேதான் மும்மொழித் திட்டத்தை ஏற்பதாகச் சொல்லிவிட்டு தமிழ்நாடு அரசு தற்போது பின்வாங்குகிறது என்று தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்ட, இரு தரப்பும் ஆளுக்கொரு கடிதத்தைக் காட்டி விளக்கிக்கொண்டிருக்கிறார்கள். தர்மேந்திர பிரதான் வெளியிட்ட தமிழக அரசின் கடிதத்தில் மும்மொழித் திட்டத்தை ஏற்பதாக எங்கேயும் குறிப்பிடவில்லை – ஆனால், கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது!
இந்தியாவில் விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களை ஒன்றிணைப்பதிலும் போராடுவதிலும் மதமோ, இனமோ, மாநிலமோ – ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள் - ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. விடுதலைக்குப் பின் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தி என்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதே எதிர்ப்பும் தோன்றிவிட்டது. பின்னால், மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது இதுவே கூர்மைப்பட்டு, மொழி என்பது பேசுவோரின் விட்டுக்கொடுக்க இயலாப் பெருமையாகிவிட்டது. மக்கள் விரும்பாத வரை ஹிந்தி திணிக்கப்படாது என பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவே உறுதிமொழி அளிக்க நேரிட்டது.
தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பும் மொழிப் போராட்டமும் நேரிட்ட உயிரிழப்புகளும் நெடிய வரலாற்றைக் கொண்டவை.
சோவியத் ஒன்றியம் சிதறியதற்கான பல்வேறு அரசியல் காரணங்களுடன் (பெரும்பான்மையாக இருந்த காரணத்தால்) ரஷிய மொழியின் ஆதிக்கமும் ஒரு குறிப்பிட்ட பங்கு வகித்தது. பின்னால் ஒன்றியத்திலிருந்து புதிதாக உதயமான பல நாடுகளில் ரஷிய மொழியே சிறுபான்மையாக நேர்ந்துவிட்டது என்பதுதான் முரண். கட்டுரையொன்றில், தக்க தருணத்தில் மிகச் சரியாகவே இதை நினைவுகூர்ந்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றபோது, ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வாழ்க்கையே பெரும் சிரமங்களைக் கடந்துகொண்டிருக்கும்போது, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் (மன்னிக்கவும்) தூக்கி மணையிலே வை என்கிற கணக்காக, ஹிந்தி சொல்லிக் கொடுத்தால்தான்... என்று கலவரப்படுத்தியிருக்கிறார் தர்மேந்திர பிரதான் (ஏற்கெனவே, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிடமிருந்து எக்குத்தப்பாக வரிகளை அள்ளி வாங்கிக்கொண்டு, நிதி ஒதுக்கும்போது கிள்ளிக்கிள்ளிக் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது).
நாடாளுமன்றத்திலும் விவாதித்து, வெளிநடப்புகள் எல்லாம் நடந்து இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் இன்னமும் தமிழ்நாட்டுக்குரிய இந்தக் கல்வி நிதியை வழங்குவது பற்றி மத்திய அரசிடமிருந்து எவ்வித அறிகுறியும் காணவில்லை. ஆக, அடுத்தது என்ன?
இன்னொரு பக்கம்
நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டுமானால் தமிழ்நாட்டின் கல்வித் தரமும் திறனும் மேம்பட்டதாக இருக்கலாம். உண்மைதான். ஆனால், இதை மட்டும் சொல்லிக்கொண்டே எல்லாக்காலமும் நாம் மகிழ்ந்திருக்க முடியாது. பிற நாடுகளுடனும் ஒப்பிட வேண்டும்; தரும் கல்வியின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
ஏனென்றால் இப்போது தமிழும் சரியாகத் தெரியாமல், ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல் ஒரு தலைமுறை அல்லது இரு தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
அரசுப் பள்ளிகளோ, பல தனியார் பள்ளிகளோ பலவற்றில் கற்பித்தல் என்பதே பலவித போதாமைகளுடன்தான் இருக்கிறது. கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே மொழிப் பிரச்சினை. இதனால், தானாக முன்வந்து கற்றுக்கொள்ள முனையும் மாணவ, மாணவியரைத் தவிர, அடுத்தடுத்த தலைமுறையினரும் விட்டேற்றியாகவே அரைகுறையாகக் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறுகின்றனர்.
ஆங்கிலத்தில் அல்ல, தமிழிலேயே பிழையின்றி எழுதும் இளைய தலைமுறையினர் குறைந்துகொண்டே செல்கின்றனர். தாய்மொழியல்லாத ஆங்கிலத்தில் சிறுசிறு பிழைகளுக்காக உணர்ச்சிவசப்படுவோர், தாய்மொழி தமிழில் ஒருமை, பன்மை தெரியாததற்கோ, ஒற்றுகளைப் புரியாமல் எழுதுவதற்கோ கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை! (அதெல்லாம் கொஞ்சம் நீங்களே பார்த்து சரிபண்ணிக்கிடுங்க சார்!).
எவ்வித தேவையுமில்லாமல் மூன்றாவதாக ஒன்றைத் திணிக்க முயலுவதைத் தடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இரு மொழிகளிலும் நம் நாளைய தலைமுறையினர் சிறப்பாகத் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதும் அவசியம். எங்கெங்கே, என்னென்ன கோளாறு? எதனால் இந்தச் சிக்கல்? எவ்வாறு தீர்க்க வேண்டும்? என்பதெல்லாமும் கல்வித் துறையினருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை!
ரூ!
₹ என்று ‘சிம்பல் ஆக’ - அடையாளக் குறியிட்டால் என்ன? அல்லது தமிழ் எழுத்தான ரூ. என்று போட்டால் என்ன? பணம் பணம்தான்.
மத்திய அரசைப் போல தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முதலாக நிதி – நிலை அறிக்கைக்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளியல் சார்ந்து நிறைய தகவல்கள், விவரங்கள், நிலவரங்கள்.
ஆய்வு அறிக்கையைப் படித்துவிட்டு அதைப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு, அட்டையில் போட்டிருக்கிற ரூ.வைக் கட்டி அழுதுகொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும் (இந்தக் கூத்தில் நிலையான வளர்ச்சி இலக்கு – எஸ்டிஜி - குறியீட்டில் நாட்டில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பது பற்றி யாருக்குத் தெரியப் போகிறது?). என்ன கொடுமை சரவணா?