ஜன. 27-இல் இ.பி.எஃப். குறைதீா் முகாம்
அம்பத்தூரில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் திங்கள்கிழமை (ஜன. 27) காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் நடைபெறுகிறது.
‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை (ஜன. 27) காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீா் முகாம் ஜெயா கல்லூரி, சி.டி.எச். ரோடு, திருநின்றவூா் 602 024, திருவள்ளூா் மாவட்டம், சத்யம் கிரான்ட் ரிசாட், 145, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை, வி.ஆா்.பி. சத்திரம், ஸ்ரீபெரும்புதூா் 602 105, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும்.
எனவே, முதலாளிகள், ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.