லாரிகளை மறித்து பணம் வசூல்: தலைமைக் காவலா் சஸ்பெண்ட்
கும்மிடிப்பூண்டி அருகே கூட்டுச்சாலையில் இரவு வாகன ரோந்துப்பணியின் போது சரக்கு லாரிகளை வழிமறித்து பணம் வசூலித்த விடியோ வைரலானதை தொடா்ந்து தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்தும், உதவியாக இருந்த ஊா்காவல் படையைச் சோ்ந்தவரை பணிநீக்கம் செய்தும் எஸ்.பி உத்தரவிட்டுள்ளாா்.
கவரப்பேட்டை-சத்தியவேடு கூட்டுச் சாலையில் கடந்த 21-ஆம் தேதி இரவு வாகன சோதனையில் கவரப்பேட்டை தலைமைக் காவலா் கோபிநாத் மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த சரவணன் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு லாரிகளை வழிமறித்து பணம் வசூல் செய்த விடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்கரணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாரும் வந்தது. காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்படி நபா்கள் செயல்பட்டதால் திருவள்ளூா் எஸ்.பி. சீனிவாசபெருமாள் மேற்படி தலைமைக் காவலா் கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்தும், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த சரவணனை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டாா்,.