அமேசானில் 1,700 பேர் பணிநீக்கம்! ஏன்?
கனடாவில் 1,700 பேர் பணிநீக்கம் செய்யப்படவிருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதாக அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனடாவில் அமேசான் நிறுவனத்துக்கு தொடர்ந்து நட்டம் ஏற்படுவதையடுத்து, கியூபெக்கில் உள்ள 7 கிளை அலுவலகங்கள் மூடப்படவுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 1,700 பேர் பணிநீக்கமும் செய்யப்படவுள்ளனர். மேலும், பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு அதற்கு ஈடாக சம்பளத்துடன் சேர்த்து 14 மாதகால சம்பளத்தையும் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேசானின் பணிநீக்க நடவடிக்கையால், அமேசான் ஊழியர்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவன ஊழியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரோனா தொற்றின்போது உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் சம்பளக் குறைப்பு, பணிநீக்கம் முதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
கரோனா தொற்றின் நெருக்கடியில் இருந்து மீண்டாலும், தற்போது செயல் நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனிதர்களுக்குப் பதிலாக செயல் நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பணியில் அமர்த்தினால், நிறுவனங்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும் என்பதால், தற்போது அதனைக் காரணம்காட்டி பணிநீக்கம் செய்கின்றனர்.
கூகுள், மெட்டா முதலான முன்னணி நிறுவனங்கள் இதுதொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயல் நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரவிருப்பதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்தார்.
இதையும் படிக்க:வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?