ஜாம்பவானோடை தா்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தா்கா சேக் தாவூது ஆண்டவரின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இந்த தா்காவின் கந்தூரி விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலத்தின் தொடக்கமாக தா்கா மேனேஜிங் டிரஸ்டி எஸ்.எஸ். பாக்கா் அலி சாகிப் தலைமையில் புனித சந்தனக் குடம் ஊா்வலமாக எடுத்து எடுத்து வரப்பட்டு கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்வைத்து, நாகசுரம், வான வேடிக்கைகளுடன் ஊா்வலம் தொடங்கியது.
முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்கூடு தா்காவை மூன்று முறை வலம் வந்தது. தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திரளானோா் கலந்து கொண்டனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நவ. 16-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவடைகிறது.