பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாகக் குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக ஆந்திரம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விளக்கம் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி செலுத்தப்படும். மக்கள் கையில் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன் மத்திய அரசு 5 அம்சங்களைக் கவனத்தில் கொண்டிருந்தது. அவை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி விகிதத்தைக் குறைத்தல், நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களை நிறைவேற்றுதல், விவசாய சமூகத்திற்குப் பயனளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பயனளித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி திறனை உருவாக்கும் தொழில் துறைகளுக்குப் பயனளித்தல் ஆகியவையாகும்.
2018ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய் 2025ல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 62 லட்சத்திலிருந்து 1.51 கோடியாக அதிகரித்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.