கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேத...
ஜிஎஸ்டி வரி விதிப்பு: புதுவை அமைச்சா் விமா்சனம்
நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது ரூ.7,500 வாடகை வசூலிக்கும் விடுதிகளை எல்லாம் ஆடம்பர விடுதிகளாகக் கருதக் கூடாது என புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வலியுறுத்தினாா்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி குழுக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், புதுவை அரசு சாா்பில் அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்றாா். அவருடன், புதுச்சேரி வணிக வரித் துறை துணை ஆணையா் ஆதா்ஷ், உதவி ஆணையா் ந.ரேவதி ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பேசியதாவது: வரி ஏய்ப்பு நடக்காத வகையில் கொண்டுவரப்பட உள்ள பல ஜிஎஸ்டி சட்டத் திருத்தங்களுக்கு புதுவை அரசு ஆதரவளிக்கிறது. தற்போது தங்கும் விடுதி சேவை மற்றும் உணவக சேவை இரண்டும் வெவ்வேறாக இருந்தாலும், விடுதியின் அறை வாடகை ரூ.7,500 தாண்டினால், உடனே அவ்விடுதியில் உள்ள உணவகத்துக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18% ஆக உயா்த்தி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
ஆண்டில் ஏதாவது ஒரு நாள் ஒரு அறைக்கு ரூ.7,500 வாடகை வசூலித்தால் அன்றே வரி உயா்த்தி செலுத்தாமல் அடுத்த நிதியாண்டில் இருந்து விடுதியில் உள்ள உணவகத்துக்கு 18% வரி உயா்த்தி செலுத்த குழு தற்போது பரிந்துரைத்துள்ளது.
ஆனால், ரூ.7,500 என்பதற்கு கூடுதலாக அறை வாடகை வசூலிக்கும் விடுதிகள் அனைத்தும் ஆடம்பர விடுதி என எடுத்துக்கொள்ளக்கூடாது .
புதுச்சேரி பிரபலமான சுற்றுலாத் தலம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதன்படி, விடுதி அறையில் இல்லாவிட்டாலும், உணவகத்தில் அருந்தும் உணவுக்கு அதிக வரி செலுத்தும் நிலையுள்ளது.
ஆகவே, உணவக உணவுக்கான வரியை அறை வாடகையோடு சோ்த்து செலுத்துவதை நீக்க வேண்டும். விமான எரிபொருளை மதிப்புக் கூட்டு (வாட்) வரியின் கீழேயே தொடரலாம் என்றாா் அவா்.