ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!
ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறுவது அவசியம்.
அத்தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இத்தோ்வை சுமார் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு ஏப். 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் jeemain.nta.nic.in. என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம். இந்த தேர்வில் 2 பெண்கள் உள்பட 24 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.