டங்ஸ்டன் – ஒரு சூப்பர் மெட்டல்!
அதென்ன திடீரென மதுரை மாவட்டத்தில் இத்தனை ஊர்களையும் ஊர் மக்களையும் காலிசெய்து டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட வேண்டிய அவசியம்? உள்ளபடியே, அரிய வகை உலோகமான டங்ஸ்டனுடைய பயன்பாட்டையும் தேவைகளையும் சந்தை நிலவரத்தையும் அறிந்தால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பில்லை.
டங்ஸ்டன் – மின்சார பல்புகளில் ஒளிரும் இழை, டங்ஸ்டன் என்ற உலோகத்தால் ஆனதென்று பள்ளியில் சொல்லிக்கொடுத்த காலத்தில்தான் பலருக்கும் டங்ஸ்டன் என்ற சொல் அறிமுகமாகியிருக்கும்; அதைத் தாண்டி இதைப் பற்றி அனேகமாக இதுவரை பெரும்பாலானோர் யோசித்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியா முழுவதும் இதைப் போல எங்கெங்கே என்னென்ன கனிம வளங்கள் இருக்கின்றன என்பதைக் கணித்து ஒரு பெரிய பட்டியலையே வைத்திருக்கிறது மத்திய அரசின் கனிமவளத் துறை.
தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப வருங்காலத்தில் இந்தப் பகுதிகள் எல்லாமும் இதேபோன்று – அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி மாதிரியில் - சுரங்கங்கள் தோண்டுவதற்காக ஏலம் விடப்படும். இப்படியாகத்தான் தமிழ்நாட்டிலும் மதுரை மாவட்டத்தில் நாயக்கர்பட்டி பகுதியில் நிலத்துக்குள் டங்ஸ்டன் தாது இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை; ஷீலைட் (கால்சியம் டங்ஸ்டேட்), வுல்ஃப்ரமைட் (பெர்ரஸ் டங்ஸ்டேட், மாங்கனஸ் டங்ஸ்டேட் ஆகியவற்றின் கலவை) ஆகிய தாதுக்களிலிருந்துதான் பிரித்து எடுக்க வேண்டும். அனைத்து உலோகங்களையும்விட டங்ஸ்டனின் உருகுநிலைதான் மிக அதிகம் – 3,422 டிகிரி செல்சியஸ்! தவிரவும், சாதாரண வெப்ப நிலையில் எந்த அமிலத்தாலும் டங்ஸ்டன் பாதிக்கப்படாது!
மின்சார, மின்னணுத் துறைகளிலும் ராணுவத் தளவாடத் தொழிலிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிற – தேவைப்படுகிற டங்ஸ்டனுக்கு எதிர்காலத்தில் உலகில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. சிறு அளவில் டங்ஸ்டன் சேர்க்கப்பட்டாலே உருக்கின் கடினத் தன்மை வெகுவாக அதிகரிக்கிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம்.
டங்ஸ்டனின் முதன்மையான பயன்பாட்டில் ஒன்றாக – கட்டுமானத் தொழில், உலோகத் தொழில், சுரங்கத் தொழில், எண்ணெய்த் துரப்பணப் பணி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மிகக் கடினமான பொருளான டங்ஸ்டன் கார்பைட் தயாரிப்பும் இருக்கிறது.
சாயங்கள், பெயிண்ட்கள், அச்சு மைகள் தயாரிப்பிலும் செராமிக் தொழிலும் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன், ஆபரணங்கள், வெப்பத் தொட்டிகள், கதிர்வீச்சுத் தடுப்பு போன்றவற்றிலும் மின்விளக்குகள், மின்சாதனங்கள், செல்போன்கள், டெலிவிஷன்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ராணுவங்களில் கவச வாகனங்களைத் துளைத்துச் செல்லும் வெடிமருந்துகளில் டங்ஸ்டன் கார்பைட் பயன்படுத்தப்படுகிறது. துப்பாக்கிக் குண்டுகளில் ஈயத்துக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறாகப் பல்வேறு அம்சங்களில் டங்ஸ்டனை ஈடுசெய்யக் கூடிய உலோகங்கள் வேறு எதுவுமில்லை என்பதாலேயே இப்போது உலகில் டங்ஸ்டன் சுரங்கங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.
தவிர, எதிர்காலத்தில் சந்தையில் டங்ஸ்டனுக்கு மிகப் பெரும் தேவை இருக்கும். ஏனெனில், மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் எல்லாம் டங்ஸ்டனுக்கான தேவை இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் டங்ஸ்டனைப் பொருத்தவரை எட்ட முடியாத உயரத்தில் முதலிடத்தில் இருப்பது சீனாதான்.
உலகில் அதிக அளவாக சீனாவில்தான் (2021-ல் 76 ஆயிரம் டன்கள்) டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்படுகிறது. அடுத்து வியத்நாமில் 15,858 டன்கள், ரஷியாவில் 2,700 டன்கள், பிறகுதான் மற்ற நாடுகள் எல்லாம்.
இந்தியாவில்...
இந்திய சுரங்கத் தகவல் தொகுப்பு (இந்தியன் பீரோ ஆஃப் மைன்ஸ்) வெளியிட்டுள்ள இந்திய கனிமங்கள் ஆண்டு நூலில் (இந்தியன் மினரல்ஸ் இயர்புக் - 2022) நாட்டில் இருப்பிலுள்ள கனிம வளங்கள் பிரிவில் 894.3 லட்சம் டன்கள் டங்ஸ்டன் இருப்பதாக (நிலத்துக்குள்தான்!) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் மேற்கு வங்கத்திலும் டங்ஸ்டன் சுரங்கங்கள் இருந்தபோதிலும் 2021-22 ஆண்டில் டங்ஸ்டன் தாது எடுக்கப்படவில்லை. மறுசுழற்சிக்குரிய கழிவுகள் உள்பட 1,209 டன்கள் டங்ஸ்டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது; 364 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு உள்நாட்டுத் தேவைகள் அனைத்தும் இறக்குமதி மூலம்தான் சமாளிக்கப்படுகின்றன. மறுசுழற்சி மூலமும் கழிவுகள், மிச்சங்களிலிருந்தும் கணிசமான அளவுக்கு டங்ஸ்டன் பெறப்படுகிறது.
தனி உலோகமாகக் கிடைக்காத டங்ஸ்டன், பிற உலோகங்களுடன் கலந்ததாக, கர்நாடகத்தில் 41%, ராஜஸ்தானில் 27%, ஆந்திரத்தில் 17%, மகாராஷ்டிரத்தில் 11% இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹரியாணா, தமிழ்நாடு, உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் 4 சதவிகிதமும் இருப்பதாகத் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் அரிட்டாபட்டி மாதிரி இந்தப் பகுதிகளில் எல்லாமும்கூட டங்ஸ்டன் சுரங்கங்கள் வரக் கூடிய – குறிப்பிட்ட நிலப்பரப்புகளின் நிலைமையைப் பொருத்து – வாய்ப்போ ஆபத்தோ இருக்கிறது!
[சந்தையில் இந்த டங்ஸ்டன் என்ன விலை இருக்கும்? தூளாக 50 கிராம் - சுமார் ரூ. 6 ஆயிரம், 100 கிராம் – சுமார் ரூ. 11 ஆயிரம். இது வெறும் தூள்தான். டங்ஸ்டனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருள்களின் விலை 25 டாலரிலிருந்து (ரூ. 2100) 2,500 டாலர்கள் (ரூ. 2.12 லட்சம்) வரையிலும். பெரும்பாலான பொருள்களின் விலை 100 டாலர்கள் (ரூ. 8,500) முதல் 350 டாலர்கள் (ரூ. 30 ஆயிரம்) வரையிலும் இருக்கிறது.]
இதையும் படிக்க.. டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய, மாநில அரசு கடிதங்களில் என்ன ரகசியம் இருக்கிறது?