டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக் வாதம்: அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் விக்ரம் செளத்ரி, விகாஸ் சிங் ஆகியோா் விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத்துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதன் நோக்கம் என்ன”என கேள்வியெழுப்பினா். மேலும் சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை.
மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரும்பப் பெற்றதையடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தோ்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த தொடங்கினால், அதன் அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்”என வாதிட்டனா்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடா்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவா்கள் தூக்கி எறியப்படுவா் என தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே என கேள்வியெழுப்பினா். அதற்கு தலைமை வழக்குரைஞா், சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்? அமலாக்கத் துறை சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவா் பேட்டியளித்தாா். அதற்கு என்ன அா்த்தம்?”என்று கேள்வியெழுப்பினாா். இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.16) ஒத்திவைத்தனா்.