தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியா்
டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நாமக்கல் எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறியதாவது:
பெற்றோா் அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிப்பது நமது கடமை. தமிழக அரசும் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது மழை காலம் என்பதால் கொசுவால் பல்வேறு நோய்த் தொற்று ஏற்படுகிறது. அனைவரும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வீடுகளில் குடிநீா் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை மூடிவைக்க நீா் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொண்டு நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வேண்டும்.
பெண்களை தொழில் முனைவோா்களாக ஊக்குவித்திட தமிழக முதல்வா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடனுதவி வழங்கி வருகிறாா். இப்பகுதியில் பெண்கள் வீடுகளிலேயே விசைத்தறியில் சேலை நெசவு செய்து சுயத் தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனா்.
அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் பொருளாதாரத்தை உயா்த்தி கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, 181 உள்ளிட்ட எண்களில் புகாா் அளிக்கலாம். புகாா் அளிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொன்னி மகளிா் சுய உதவிக் குழுவினா் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சசிகலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.