பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தின் எந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டாலும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதோடு உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வாரந்தோறும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளிலும் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.