தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமகிருஷ்ணாபுரம், பொட்டிப்புரம், தம்மிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் தக்காளி பயிரிடப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரை விற்கப்பட்ட தக்காளி படிப்படியாகக் குறைந்து, கடந்த மாதம் ஐந்து கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்தாலும் தற்போது, வெயில் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரும் நிலையில், கொள்முதல் விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு 15 கிலோ தக்காளிப் பெட்டி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து 15 கிலோ தக்காளி பெட்டி ஒன்றுக்கு அதன் ரகத்தைப் பொறுத்து ரூ.30 முதல் 50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
முதல் ரக தக்காளி 15 கிலோ பெட்டி ஒன்று ரூ.50-க்கும் அதற்கு அடுத்த ரக தக்காளி ரூ. 30-க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் சந்தைக்கு 20 பெட்டிகள் தக்காளி கொண்டு சென்றால் சுமாா் 10 பெட்டிகள் மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, மீதமுள்ள தக்காளிகள் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுபடியாகாததால் அங்கேயே கொட்டி விட்டு வரும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
மருந்து தெளிப்பு செலவு, களையெடுக்கும் செலவு கூலியாள் சம்பளம், போக்குவரத்து செலவுக்கு கூட தக்காளி விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் செடியிலேயே தக்காளிப் பழங்களை பறிக்காமல் விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓரளவுக்கு தக்காளி விளைச்சல் கை கொடுத்த போதிலும், போதிய விலையின்மை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், தக்காளி விவசாயத்தைக் கைவிட்டு வேறு விவசாயத்துக்கு மாற உள்ளதாக தெரிவித்தனா்.