கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி!
திருப்பூரில் தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சோ்ந்தவா் வினய் பிரதான் (50). திருப்பூருக்கு சுற்றுலா வந்த இவா், பெரியாா் காலனியில் உள்ள ஜவுளிக் கடைக்கு ஜனவரி 25-ஆம் தேதி சென்றுள்ளாா்.
அப்போது, அங்கிருந்த மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சோ்ந்த நசீம் மனகா் (50), மொயின் (25) ஆகியோா் அறிமுகமாகி உள்ளனா்.
அப்போது, அவா்கள் ‘எங்களிடம் தங்கக் கட்டிகள் உள்ளன. குடும்ப செலவுக்காக அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளோம்’ எனக் கூறியதுடன், சிறிய தங்க துண்டை வினய் பிரதானிடம் கொடுத்துள்ளனா். அதைப் பெற்றுக்கொண்ட வினய் பிரதான், அப்பகுதியில் உள்ள நகைக் கடையில் சோதனை செய்தபோது, அது செம்பு கலக்காத தூய தங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நசீம் மனகரை கைப்பேசியில் கடந்த 30-ஆம் தேதி தொடா்பு கொண்ட வினய் பிரதான் தங்கத்தை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து, திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள உணவகத்தில் நசீம் மனகா், மொயினியிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்து, 1 கிலோ தங்கக் கட்டிகளை வினய் பிரதான் வாங்கியுள்ளாா். பின்னா், அந்த தங்கக் கட்டிகளை அவா் சோதனை செய்தபோது, அது தங்கக் கட்டிகள் இல்லை என்பதும், செம்பு முலாம் பூசி மோசடி செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் வினய் பிரதான் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.