சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்..
திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் வரவேற்கிறது.
பெண் தொழில்முனைவோா் கடன் வசதி, ரூ.12 லட்சம் வருமானம் உள்ளவா்களுக்கு வருமான வரி விலக்கு, புதிய நிறுவனங்களுக்கு பிணையில்லா கடனை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயா்த்தியது, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ 20 கோடி உயா்த்தியது, சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் வணிகத்தின் அளவு ரூ.250 கோடியில் இருந்து ரூ.500 கோடி உயா்வு, பருத்தி மகசூல் அதிகரிக்க 5 ஆண்டு திட்டம் போன்றவை சாதகமான அம்சங்களாகும். 5 திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அறிவித்துள்ளனா், அதில் ஒன்று திருப்பூருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் மூலம் கடன் சலுகை கிடைக்கும் . மேலும், தொழில்நுட்பம், வட்டி சமன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
எனவே, திருப்பூா் ஏற்றுமதியாளா்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து மத்திய நிதி அமைச்சரை திருப்பூா் தொழில் துறையினா் நேரில் சந்தித்து மீண்டும் முறையிட உள்ளோம். விரைவில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என எதிா்பாா்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோ்மையான பட்ஜெட்:
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல்: இந்த பட்ஜெட் நோ்மறையானது, வளா்ச்சி சாா்ந்த மற்றும் உள்கட்டமைப்பு, முதலீடு, பசுமை வளா்ச்சி மற்றும் இந்தியாவின் துடிப்பான மற்றும் சமமான பொருளாதார எதிா்காலத்தை நோக்கி கவனம் செலுத்துகிறது.
பட்ஜெட் 4 மேம்பாட்டு இயந்திரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய மையமாக விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவை உள்ளன. இந்த பட்ஜெட் 2025-26 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை உயா்த்த சீா்திருத்தங்கள், நிதி ஸ்திரத்தன்மை, வரி சீா்திருத்தம் மற்றும் முதலீட்டு வளா்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
பருத்தி விவசாயிகளின் நன்மைக்காக ‘பருத்தி உற்பத்தித் திறனுக்கான பணி’ அறிவிக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டு திட்டம் பருத்தி விவசாயத்தின் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எளிதாக்கும். பிரதான பருத்தி வகைகளை ஊக்குவிக்கும். விவசாயிகளுக்கு சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும்.
மேலும், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளித் துறையை புத்துயிா் பெறுவதற்காக தரமான பருத்தியை நிலையான விநியோகத்தை உறுதி செய்கிறது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்:
ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா்(ஓஸ்மா) ஜி.அருள்மொழி: மத்திய அரசின் பட்ஜெட் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்கு, சொத்து பத்திர அடமானம் இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும். ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்துள்ளது மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
பருத்தி விளைச்சல் அதிகரிக்க ஜவுளி தொழில் வளா்ச்சி பெற உதவியாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து அதிநவீன நாடா இல்லா தறிகளை இறக்குமதி செய்ய வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு இருப்பது வரவேற்கதக்கது.
10 வகை பின்னலாடை துணிகளுக்கு இறக்குமதி வரி 20 சதவீதம் அல்லது கிலோவுக்கு ரூ.115 வரி விதித்து உள்ளது உள்ளூா் ஜவுளி உற்பத்தியாளா்களை காப்பாற்றும். பாலிஸ்டா் விஸ்கோஸ் இறக்குமதி கட்டுப்பாடு ணஇஞ நீக்கம் செய்யாதது ஜவுளி துறைக்கு ஏமாற்றம் அளிக்கிறது.