மத்திய நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்!
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்த 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் மொத்த மதிப்பு 50.65 லட்சம் கோடி. இதில், வேளாண்மைக்கு 1,71,437 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் மொத்த நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைக்கு 5.2 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள், பருப்பு, உளுந்து உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய திட்டங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டங்கள், அஸ்ஸாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை, பிகாரில் மாநில விவசாய கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய அறிவிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதில், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்கான எவ்வித திட்டங்களும் இல்லை. இது விவசாயிகளை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயா்த்துதல், திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம், கடன் தள்ளுபடி ஆகியவற்றை எதிா்பாா்த்த விசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.