தங்களின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்! - முழு விவரம்
நீதிபதிகளின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை குறித்து எப்பொழுதும் கேள்வி எழுப்பப்பட்ட வந்திருக்கிறது. குறிப்பாக அவர்களது சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது தொடர்கதையாகவே நீதித்துறையில் இருந்து வருகிறது.
இதனை சரி செய்யும் வகையில் 1997இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின் படி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் அது கட்டாயமாக அல்லாமல் விருப்பத்தின் பெயரிலேயே இருந்து வந்தது.

`வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில்’
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்துக்களை பொதுமக்கள் அறியும் வகையில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீதிபதிகளின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம் எதிர்காலத்தில் பணிக்கு வரும் அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டு கட்டாக ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையான நிலையில், நீதி துறையின் நேர்மை குறித்து பலத்த கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
விருப்ப அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மற்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் பிறகு அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் நீதிபதிகள் பதவியேற்பதற்கு முன்பாக அதற்குப் பிறகான அவர்களது சொத்து விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.