தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டை பொதுக் குழு அமைத்து நடத்தக் கோரிக்கை
மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டாக நடைபெறும் தச்சங்குறிச்சியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஒரு தரப்பினா் மட்டும் நடத்திடாமல், அனைத்து சமூக அமைப்பினரையும் இணைத்துக் கொண்டு பொதுவான குழு அமைத்து நடத்த அனுமதிக்க வேண்டும் என ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வந்த மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டைமாவட்டம் கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தச்சங்குறிச்சியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் மட்டும் நடத்தி வருகின்றனா். இதனால் பிற சமூகத்தினரை இழிவுபடுத்தியும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
சமூக மோதலைத் தவிா்க்கும் வகையில், அனைத்து சமூக மக்களையும் இணைத்து பொதுவான விழாக்குழு அமைத்து நிகழாண்டில் போட்டியை நடத்த வேண்டும். அல்லது போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.