விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. செல்வராஜ் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன், விவசாயிகள் சங்கங்களின் மாவட்டத் தலைவா்கள் எஸ். பொன்னுசாமி, அம்பலராஜ், நிா்வாகி சுந்தர்ராஜ், கல்லணைக் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் (அக்ரிகல்ட்சுரல் மாா்க்கெட்டிங் சிஸ்டம்) திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நொய்டாவில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனே விடுவிக்க வேண்டும். பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்வது, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.