வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
கேரள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இடையூறு விளைவித்து சீர்குலைக்க முயன்றனர். பாலக்காட்டில் உள்ள மற்றொரு பள்ளியில் மாணவர்கள் குழந்தை இயேசுவுக்கு செய்தத் தொட்டிலை மர்ம நபர்கள் சிதைத்தனர். இது கேரளத்தில் பரவலாக எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசு இதுகுறித்து விசாரிக்க சிறப்புக் காவல் படையினரை நியமித்துள்ளனர்.
இதையும் படிக்க | எம்ஜிஆர் நினைவுநாளில் பவன் கல்யாண் சொன்ன விஷயம்..!
இதனைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்கள் மற்றவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், மற்றவரின் மகிழ்ச்சியைத் தன்னுடையதாகக் கருதும் திறனத மனநிலையைக் கொண்டுள்ளனர். நாம் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் அன்பைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே பார்க்கிறோம்.
கேரளத்தில் எல்லா மதத்தினராலும் அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையும் படிக்க | பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!
ஆனால், இன்று சில வகுப்புவாத சக்திகள் நமது பண்பாட்டை பலவீனப்படுத்தவும், மத நம்பிக்கைகளை வெறுப்புணர்ச்சியாக மாற்றவும் முயற்சிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சமீப காலங்களில் சங் பரிவார் அமைப்பினால் நடத்தப்படும் தாக்குதல்கள் அபாயகரமான போக்கினை எடுத்துக் காட்டுகின்றன.
கேரளத்திற்கும் அதன் மக்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும் கலாச்சாரமற்ற நபர்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.
இந்த வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நமது மாநிலத்தின் சாராம்சத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.