17 சிறாா்களுக்கு ‘பால புரஸ்காா் விருது’: குடியரசுத் தலைவா் நாளை வழங்குகிறாா்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 17 சிறாா்களுக்கு நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை (டிசம்பா் 26) வழங்குகிறாா்.
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த சிறாா்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிசம்பா் 26) நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
நிகழாண்டு 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 7 சிறுவா்கள் மற்றும் 10 சிறுமிகள் இந்த விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ஆவணத்தை டிசம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்குகிறாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமா் மோடி, கிராமங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் ‘சுபோஷித் பஞ்சாயத்து’ திட்டத்தை தொடங்கி வைக்கிறாா். விருது பெறுபவா்கள் உள்பட 3,500 சிறாா்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தேசத்தின் வளா்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வீர பால திவஸ் கொண்டாடப்படுகிறது. அதேபோல், அடுத்த தலைமுறையினரை சிறந்த குடிமக்களாக உருவெடுக்கச் செய்யும் நோக்கில் ராஷ்ட்ரீய பால திவஸ் மற்றும் சுபோஷித் பஞ்சாயத்து ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.