உக்ரைன்: கிறிஸ்துமஸ் நாளில் ஏவுகணை தாக்குதல்! மின் விநியோகம் கடுமையாக பாதிப்பு
இளைஞர்களுக்கு வழிகாட்டும் வாஜ்பாயின் லட்சியங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் தேச பங்களிப்பும் அவரது லட்சியங்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம், லக்னெüவில் உள்ள கே.டி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற "அடல் யுவ மகாகும்ப' விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:
இந்திய அரசியல் வானில் கடந்த 1924, டிச. 25-ஆம் தேதி உதயமான சூரியன் இன்றுவரை அஸ்தமிக்காமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அடல் பிகாரி வாஜ்பாயின் ஆளுமை, செயல்களை இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் நன்கு அறிந்துள்ளது.
வாஜ்பாய் ஒருமுறை பாகிஸ்தான் சென்றிருந்தபோது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் இவ்வாறு கூறினார். "காஷ்மீரை வரதட்சிணையாக தந்தால் உங்களை திருமணம் செய்து கொள்வேன்' என்றார். அந்தப் பெண்ணுக்கு புன்னகையுடன் பதிலளித்த வாஜ்பாய், "முழு பாகிஸ்தானையும் வரதட்சிணையாக நீங்கள் தந்தால் நானும் திருமணத்துக்கு தயார்' என்றார். இது அவரது மதிநுட்பத்தையும், நகைச்சுவை பண்பையும் வெளிக்காட்டுகிறது.
வாஜ்பாயின் ஆளுமை மிக உயர்ந்தது; அவரது தலைமைத்துவ பண்பும் முடிவுகளும் உலகம் முழுவதும் பாராட்டு பெற்றவை. அவரது இதயத்தில் லக்னெüவுக்கு சிறப்பு இடம் உண்டு.
வாஜ்பாயின் வழிகாட்டுதலுடன் அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பணியாற்றுள்ளேன். வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தபோது அவரது வரலாற்று சிறப்புமிக்க பேச்சு, தேச பக்தியையும், ஜனநாயகத்தையும் மறுவரையறை செய்தது.
அரசுகள் வரும், போகும்; கட்சிகள் உருவாகும், காணாமல்போகும். ஆனால், இந்தத் தேசமும் அதன் ஜனநாயகமும் எப்போதும் நீடிக்கும் என்று கூறினார்.
வாஜ்பாயின் இந்தப் பேச்சு அவரது தொலைநோக்கு பார்வைக்கும் உறுதியான கொள்கைக்கும் சிறந்த சான்றாகும்.
வாஜ்பாய் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்பும், அவரது லட்சியங்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன. உத்தர பிரதேச மாநிலம் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் ஆதித்யநாத்தின் தலைமைத்துவமும் அயராத முயற்சியும் உத்தரபிரதேசத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. வாஜ்பாய் கண்ட கனவான வளம், வளர்ச்சியை இந்த மாநிலம் கண்டுள்ளது என்றார்.
இரண்டு நாள் மருத்துவக் கண்காட்சி: வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லக்னெü, தில்குஷானில் நடைபெற்ற இரண்டு நாள் "அடல் மருத்துவக் கண்காட்சியை' பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், முதல்வர் ஆதித்யநாத்தும் தொடங்கிவைத்தனர்.
மேலும், ரூ. 662 கோடி மதிப்பிலான 181 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
லக்னெள தொகுதியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். ஸ்திரமற்ற இந்திய அரசியலை ஸ்திரமுள்ளதாக மாற்றியவர். இங்கு முதல் மருத்துவக் கண்காட்சி வாஜ்பாய் தலைமையில் 1998-99-இல் நடைபெற்றது. அதன்பின் இக் கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2020 முதல் 2023 வரை 50,000 பேர் இக்கண்காட்சியால் பலனடைந்துள்ளனர் என்றார்.