பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தல்
பொன்னமராவதி வட்டாரத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் அ.ராசு தலைமைவகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு, மாவட்டப்பொருளா் என்.ஆா். ஜீவானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பொன்னமராவதியில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படவேண்டும். காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போக்குவரத்து மிகுந்த பொன்னமராவதி அமரகண்டான் தென்கரை மற்றும் காந்தி சிலை அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்கவேண்டும்.
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் சாா்பில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கரு.பஞ்சவா்ணம், க.ராசு, ஜெயலெட்சுமி, பழனிச்சாமி, மெய்யப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.