கட்சிக்குள் இருக்கும் பிசுறுகளை ஊதிப் பறக்கவிட வேண்டும் - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை
நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் `அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்ற நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ``நிர்வாகிகள் வெளியேறுவதால் வாக்கு சதவீதம் குறையாது, இன்னும் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளையும் பிசுறுகளையும் ஊதி பறக்கவிட வேண்டும்” எனப் பேசி சர்ச்சையைப் பற்ற வைத்திருக்கிறார் சீமான்.
நம்மிடம் பேசிய திருச்சி நா.த.க-வினர் ``கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதால், நா.த.க கூடாரம் காலியாகிறதென கருத்துருவாக்கம் செய்கிறது தி.மு.க தரப்பு. இது ஆக்ட்டிவ்வாக கட்சியில் இருப்போரை உளவியல் ரீதியாக பாதித்துவிடக் கூடாதென பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார்கள் சீனியர்கள். அந்த வகையில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட திருச்சி பொறுப்பாளர்கள் இணைந்து `அண்ணனுடம் ஆயிரம் பேர்’ நிகழ்வை ஒருங்கிணைத்து மாற்றுக் கட்சியினர் நா.த.க-வில் இணைவது, நிர்வாகிகள் அண்ணன் சீமானிடம் கேள்வி எழுப்புவது போன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டோம்.
தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெறுகிறது.” என்றனர். நிகழ்வில் சீமானிடம் கேள்வி எழுப்பிய கட்சி நிர்வாகிகள் பொருளாதார சிக்கல், கட்சியினர் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
அப்போது `முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதால் கட்சிக்கு பாதிப்பா.. இதனால் வாக்கு சதவிகிதம் குறையுமா?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சீமான் ``இன்றைக்குக் கட்சியைவிட்டு வெளியேறியவர்களெல்லாம் 2024 தேர்தலில் வேலையே பார்க்காதவர்கள்தான். இருப்பினும் நமது வாக்கு சதவிகிதம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. இப்போது வெளியேறிய நிர்வாகிகளையெல்லாம் எப்படி வெளியே அனுப்புவது என எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்களாவே சென்றுவிட்டார்கள். முதலில் அவர்கள் முக்கிய நிர்வாகிகள் அல்ல. நம் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை நிர்வாகிகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் வெளியே சென்றது உண்மையிலேயே நல்லது என்பது 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்” என்றவர்,
தொடர்ந்து ``இன்னும் சில குப்பைகளும், பிசுறுகளும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை ஊதி பறக்கவிட வேண்டும். அந்த வேலையை எனக்காக தி.மு.க செய்துமுடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர் ``பிசிறு என காளியம்மாளை அவர் விமர்சித்ததாக வெளியான ஆடியோ கட்சிக்குள் பெரும் புயலையே கிளப்பியது. ஆகவே கட்சிக்குள் இருக்கும் பிசுறுகளை ஊதிப் பறக்கவிட வேண்டும் என்ற சீமானின் பேச்சு யதார்த்தமானது அல்ல. அவர் தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற தகவல் பரவும் சூழலில் அவரது இப்படியான பேச்சு சம்பந்தப்பட்டவர்களுக்கான மெசேஜ்ஜாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு சர்ச்சைகள் வரிசைக் கட்டினாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் கடந்துசெல்லும் காளியம்மாள் சீமானின் இந்த பேச்சுக்கு என்ன ரியாக்ட் செய்யப்போகிறார் என பரபரக்கிறது நா.த.க முகாம்” என்றனர்
இன்னும் என்ன பரபரப்புகளை சந்திக்கப் போகிறதோ நா.த.க... பொறுத்திருந்து பார்ப்போம்!