அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளின் நிலவரம் தான் என்ன? - ஒரு பார்வை
“எப்போதுமே இந்தியாவில் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றியே பேசுவதை விடுத்து, மற்ற நாடுகளில் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அண்மையில் இந்து சேவா மஹோத்ஸவம் நடந்தது. அதன் துவக்க விழாவில்தான் மோகன் பாகவத் இவ்வாறு பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியை இந்து ஆத்யத்மிக் சேவா சன்ஸத் மற்றும் ஷிக்ஷான் பிரச்சாரக் மண்டலி இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “எப்போது பார்த்தாலும் இந்தியா தனது சிறுபான்மையின மக்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், உலகில் உள்ள பிற நாடுகளிலும் சிறுபான்மையினரின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் கவனிப்பது நல்லது. சிலர் சிறுபான்மையினர் மேம்பாட்டில் அக்கறை காட்டலாம். ஆனால், வெறும் ஆசைகள் மட்டும் மெய்யாகிவிடாது. அதற்கு முயற்சிகள் தேவை.
உலக அமைதிக்காக ஒருபுறம் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, பல பகுதிகளிலும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அமைதி நிலவ வேண்டும் என்றால் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையேற்க வேண்டும். நவீன வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளாக இந்தியா ஒரு வழிகாட்டும் சக்தியாக திகழ்ந்து வருகிறது. உலகுக்கு இப்போது அமைதி தேவைப்படுகிறது. அந்த அமைதியை இந்தியா தான் நல்க முடியும்.
தனித்துவத்துக்கான தீவிர முக்கியத்துவம் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், திருமணமின்றி தனித்தே வாழ்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். நான் நான் என்ற இந்தப் போக்கினால் இந்தியாவில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. மக்கள் தங்களின் அடையாளம் சமூகத்துடன், சுற்றுப்புறத்துடன், ஒரு உயர்ந்த சக்தியுடன் பொருத்தியே அறியப்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மோகன் பாகவத்தின் பேச்சில் பல்வேறு கோணங்கள் இருந்தாலும் கூட, தற்போதைய புவி அரசியலில் சிறுபான்மையினரின் பிரச்னைகள் ஆழ்ந்து விவாதிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் காரணமாக அவர் கடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
அதன் பின்னர் அங்கு சிறுபான்மையினருக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்துக்கள் படுகொலைகளும் நடந்துள்ளன. இந்துப் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர். வங்கதேச இந்துக்களுக்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி,க்கள் கூட குரல் கொடுத்து போராட்டம் நடத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.
வங்கதேச இடைக்கால அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டும் என்று மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தியிருந்தார். இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியர்கள் சிறுபான்மையினர்களாக அறியப்படுகிறார்கள். இந்தச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்தான் பெரும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். காலங்காலமாக இந்த சிறுபான்மையினங்களைச் சேர்ந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி முஸ்லிம் சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ளும் போக்கு நிலவுகிறது.
பெண்களுக்கு இத்தகைய துன்பம் என்றால், ஆண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்துவது நடைபெறுகிறது. 1947-ம் ஆண்டு பாகிஸ்தானில் இந்துக்கள் மக்கள் தொகை 15 சதவீதமாக இருந்தது. இப்போது அது வெறும் 2 சதவீதமாகவே இருக்கிறது.
பாகிஸ்தானில் கிறிஸ்துவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இங்கே நிலவிய சாதிய அடக்குமுறையை சகிக்க முடியாமல் கிறிஸ்துவத்துக்கு மாறி பாகிஸ்தான் தப்பிச் சென்ற அவர்கள் அங்கே மத ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது. அங்கே வேத பிரசங்கம் செய்தாலே மதமாற்றம் என்று கூறி நிந்திக்கப்படுகிறார்கள். கைது, கொலை என அடக்குமுறைகள் நீள்கிறது.
பிளவுபடாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் கடியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முஸ்லிம் அறிஞர் மீர்சா குலாம் அகமது (1835 - 1908). குரான், சுன்னா, ஹதீஸ் ஆகியவற்றைப் பின்பற்றியவர் அவர். எல்லையற்ற கருணையுள்ள அல்லாவே ஒரே கடவுள். அவருடைய போதனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும், அனைவரையும் அவரைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர், இறையருள் தன்னுள் இறங்கியதாகவும் சில ஆலோசனைகளைக் கூறியதாகவும் கூறினார்.
இஸ்லாமியர்களிடையே மதப்பற்றும், வழிபடல்களில் சரியான முறைகளும் குறைவதாகக் கருதிய அவர், அமைதி வழியில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இப்படியாக இஸ்லாத்தில் 1889-ல் புதிய பிரிவு ஏற்பட்டது. அவரைப் பின்பற்றுபவர்கள் ‘அகமதியாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அகமதுவை அவரது ஆதரவாளர்கள் ஓர் உருவகமாக, தூதர் என்றனர். பிற முஸ்லிம்கள் இதை ஏற்கவில்லை.
அகமதியா இயக்கம் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. உலகில் உள்ள 106 கோடி முஸ்லிம்களில் அகமதியர்கள் எண்ணிக்கை 1.25%. அகமதியர்கள் நன்கு படித்தவர்கள். 1974-ல் பிரதமர் சுல்பிகர் அலி புட்டோ நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து ‘அகமதியர்கள் முஸ்லிம்கள் அல்ல’ என்று அறிவித்தார். அன்று தொடங்கிய அவர்களின் துயரம் இன்றளவும் தீர்ந்தபாடில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இலங்கையில் புத்த மதத்தினர்தான் பெரும்பான்மை சமூகத்தினர். அங்கே அடக்குமுறைக்கு ஆளாவது முஸ்லிம்களும், தமிழ் சமூகத்தினருமே. இலங்கைத் தமிழர்கள் துயரத்தைப் பேச தனியாகப் பெருங் கட்டுரையே எழுத வேண்டும். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கி பிரபாகரன் வீழ்ச்சி வரை பேசி அதன் பின்னர் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டங்கள் வரை பேசிக் கொண்டே செல்லலாம்.
ஆனால், “தமிழர்கள் சிங்கள பெரும்பான்மைவாதத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க. 13-வது சட்டத் திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டை எப்போதுமே வெளிப்படையாக எதிர்த்தவர், எதிர்ப்பவர் தான் திசநாயக்க. அதனால் அங்கு தமிழ் சிறுபான்மை சமூகத்தினருக்கான கலங்கரை விளக்கம் எங்கிருக்கிறது என்று தேடத்தான் வேண்டும்.
இலங்கையில் உள்ள சிறிய அளவிலான கிறிஸ்துவ சமூகத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். பெரிய அளவில் மதமாற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு விழிப்புடன் இருக்கிறது. ஏதோ ஒரு போர்வையில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது.
இவ்வாறாக உலகம் முழுவதும் மதம், இனம் என பல்வேறு வகையில் சிறுபான்மையினச் சமூகங்கள் சந்திக்கும் இன்னல்கள் வெளிச்சத்துக்காக காத்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா என்று இதில் கண்ட பாகுபாடு ஏதும் இல்லை என்பது தான் சோகம்.!