சென்னை: 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி-ஆகப் பதவி உயர்வு - பட்டியல் இதோ
தமிழக காவல்துறையில் ஒவ்வோர் ஆண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு 4 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதுதவிர ஒரே ஒரு ஐ.ஜி-க்கு ஏ.டி.ஜி.பி பதவி உயர்வும் 5 டி.ஐ.ஜி-களுக்கு ஐஜி பதவி உயர்வும் 8 எஸ்.பி-க்களுக்கு டி.ஐ.ஜி பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.
அவர்களின் விவரங்கள் குறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம்.
``கடந்த 1994-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஏ.டி.ஜி.பி-க்களாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இந்தாண்டு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி வரும் ஜனவரிக்குள் அதற்கான ஆர்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஐ.ஜியாக இருக்கும் சோனல் மிஸ்ராவுக்கு இந்தாண்டு ஏ.டி.ஜி.பி -ஆகப் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து டி.ஐ.ஜி-க்களாக இருக்கும் 2007-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ஜ் அதிகாரிகளான சரவணசுந்தர், சேவியர் தன்ராஜ், பிரவேஸ்குமார், அனில்குமார், கயல்விழி ஆகிய 5 பேருக்கு ஐ.ஜி - ஆக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. அடுத்து 2011-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரிகளான வருண்குமார், சந்தோஷ் ஹதிமானி, நிஷா பாத்திபன், பண்டிகங்காதரர், சசிமோகன், முரளி ரம்பா, வந்திதா பாண்டே, பி.சி.கல்யாண் ஆகிய எட்டு பேருக்கு டி.ஐ.ஜி - ஆகப் பதவி உயர்வு கிடைக்கவுள்ளது.
ஆகமொத்தத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வுக்கான ஆர்டர் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் குட்கா விவகாரத்தால் தினகரன் ஐ.பி.எஸிக்கு ஏ.டி.ஜி.பி - ஆகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது குட்கா விவகாரத்தில் தினகரன் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஏ.டி.ஜி.பி - ஆகப் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது" என்றனர்.