லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் – அத்தியாயம் 4 | தொடர்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
தன் காபின் விட்டு வெளியில் வந்த லாஃப்ரா, ரேகாவை சற்று காத்திருக்க சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.
அவள் எதிரில் வந்த இன்ஸ்பெக்டர் அபி,” நீங்கள் சொன்னதை செய்துட்டேன் மேடம்” என்றாள்.
“நல்லது. நீ உடனே போரூர் கிளம்பு. அங்கே ஒரு பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. பிரச்னை பெரிசாகிவிடும் போல் இருக்கிறது. போகிற வழியில் கருணாவை பிக் அப் செய்து கொண்டு போய் விடு. நம் பெயரை கெடுக்காத மாதிரி இருந்தால் நல்லது. நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்கிறேன்”
”அமர்சிங்” என்று கேள்விக்கணை தொடுத்தாள் அபி.
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபியை அனுப்பி வைத்தாள் லாஃப்ரா.
அமர்சிங்கை தன் காபின் வெளியில் உட்கார வைத்து ரேகாவை உள்ளே அழைத்துச் சென்றாள் லாஃப்ரா. ரேகாவை பார்த்து நல்வாழ்த்துக்கள் பகிர்ந்தான் அமர்சிங். அதில் இருந்தே ரேகாவுக்கு அமரை தெரியும் என்பது லாஃப்ராவுக்கு தெரிந்தது.
உள்ளே வந்த ரேகாவை அமரச் செய்த லாஃப்ரா,” ரேகா, உங்களிடம் தாமோதரனை பற்றி விசாரிக்க வேண்டி இருக்கிறது” என்றாள்.
யார்க்கர் பந்து வரும் என்று எதிர்பார்த்த பேட்ஸ்மேன் ஃபுல்டாஸை எதிர்கொள்ள தடுமாறுவது போல் ரேகாவின் முகம் இதைக் கேட்டவுடன் வெளிறிப் போனது.
”தாமோதரன் பற்றி என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு?”
“தாமோதரனுக்கு உங்கள் மொபைல் எண்ணில் இருந்து கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அழைப்பு போயிருக்கிறது”
“தாமோதரன் எங்கள் வங்கி வாடிக்கையாளர். வாடிக்கையாளருக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையில் எவ்வளவோ இருக்கும். வாடிக்கையாளர் ரகசியம் காப்பது வங்கி அலுவலர்களின் கடமை”
”காவல் அதிகாரிகள் விசாரணையின் பொழுது இந்த ரகசிய உட்கூறு எடுபடாது என் அருமை மேலாளரே. மேலும் தாமோதரனின் பெண் ரூபா கடத்தப் பட்டிருக்கிறாள். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் எங்கள் பொதுவான, கடுமையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டி இருக்கும்”
இதைக் கேட்ட ரேகா அழ ஆரம்பித்துவிட்டாள்,” என் மேல் தப்பு எதுவும் இல்லை மேடம். எனக்கு ஒன்றும் தெரியாது மேடம்”
அவள் அழுகையை எதிர்பார்க்காத லாஃப்ரா சிறிது அவகாசம் கொடுத்தாள் சாதாரண நிலையை அடைய. ஆனால் ரேகாவின் அழுகை நிற்கவில்லை. மாறாக வலு இழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல் அழுகை நின்று விசும்பல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஆனந்த் மீண்டும் லாஃப்ராவிற்கு மொபைலில் அழைப்பு விடுத்தான்,” மேடம், ரியா இன்னும் வீடு வரவில்லை. இரவு வீடு வராமல் அவள் வெளியில் தங்குவது சகஜம் தான் என்கின்றனர் அவள் பெற்றோர்”
“நீ கிளம்பிவிடு ஆனந்த். கமிஷனர் அலுவலகம் வந்து விடு”
கமிஷனரிடம் இருந்து லாஃப்ராவிற்கு மொபைலில் அழைப்பு வந்தது. ”என்ன செய்துகொண்டிருக்கிறாய் லாஃப்ரா. தாமு முதல் அமைச்சரை தொந்தரவு செய்கிறான் போல் இருக்கிறது”
“சீட் ஏதாவது கேட்கிறாரோ என்னமோ”
”லாஃப்ரா, எதிர்கட்சியை சேர்ந்தவன் தாமு என்பதை மறந்து விடாதே. மேலும் தேர்தல் நேரம். தாமுவின் மகள் ரூபா காணாமல் போனது பெரிய ஸ்கூப். நாம் ஊடகங்களில் இருந்து வேறு செய்தியை மறைத்திருக்கிறோம். ஆளும் கட்சி என்னை பயமுறுத்த காவல்துறையின் உதவியுடன் என் மகளை கடத்தி வைத்துள்ளதோ, என்று சந்தேகமாக இருக்கிறது என்று முதல் அமைச்சரை மிரட்டுகிறான் போல இருக்கிறது”.
“முதல் அமைச்சர் நாளை காலை பத்து மணி வரை நேரம் கேட்டிருப்பார் போலிருக்கிறது. முடியுமா உன்னால்”
“சார் போரூர் ஏரிக் கரையில் ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது”
”எள்ன? கமிஷனரின் வாய் குளறியது. வீடு சென்றவுடன் தண்ணீருக்கு பதில் ஸ்காட்ச் எடுக்கும் பழக்கம் உள்ளவர் கமிஷனர் என்பது லாஃப்ராவிற்கு தெரியும்.
“ஆமாம் சார். அபியை அனுப்பி இருக்கிறேன்”
“ஏன் நீ போகவில்லை?” சற்று காரமாகவே கேட்டார் கமிஷனர்.
“நான் வேறு ஒரு முக்கிய விசாரணையில் இருக்கிறேன் சார்”
”ஏதோ பார்த்துக்க லாஃப்ரா. நாளை காலை பத்து மணி தான் நம் இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள சாவுக்கோடு”
சார், பத்து மணிக்குப் பின்?”
”பிரஸ் மீட் கூட்டுவேன் என்கிறான் போல. அதனால் நமக்கு அதாவது உனக்கு விதிக்கப்பட்ட டெட்லைன் காலை பத்து மணி” என்று இணைப்பை துண்டித்தார் கமிஷனர்.
லாஃப்ரா ரேகாவை தன் காபினில் விட்டுவிட்டு வெளியில் நின்று கொண்டிருந்த அமர்சிங்கை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் அபியின் காபினுள் நுழைந்தாள்.
அமர் லாஃப்ராவிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தான்,”மேடம் நான் ஒரு கொத்தடிமையாக தாமு சாரிடம் வேலை பார்த்து வருகிறேன். ஒரு வருடமாக எனக்கு சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. நான் ஊருக்கும் போக அனுமதிக்க மறுக்கிறார். அந்த ஆளைப் பற்றியது எல்லாவற்றையும் நான் சொல்ல தயார் மேடம்”
”அமர் நீ பேசுவதை நான் மொபைலில் ஒளி/லிப்பதிவு செய்யப்போகிறேன்”
“சரி மேடம்” என்ற அமர்சிங் பாடிய பாட்டை கேட்ட லாஃப்ராவின் படபடப்பு அடங்க வெகு நேரமானது.
ஆனந்த் வந்தவுடன் லாஃப்ரா அமர்சிங்கை அவனுடன் அனுப்பி வைத்தாள். ”என் வீட்டில் விட்டு விடு. நாளை அவனை பார்த்துக்கொள்வோம்”
அபியிடம் இருந்து அழைப்பு வந்தது, ” மேடம் போரூர் அடைந்து விட்டேன். அந்த சடலம் நம் விசாரணை சம்பந்தப்பட்டதல்ல”
லாஃப்ரா ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் “நல்லது. கமிஷனர் ஆஃபிஸ் வந்து விடு. அடுத்த அரை மணி நேரத்தில் நாம் மீண்டும் சந்திக்கிறோம்.”
இரவு ஒன்பது மணி ஆகி இருந்தது.
ஆனந்த் வந்திருந்தான். அபிக்கும் கருணாவுக்காகவும் இருவரும் காத்திருந்தனர்.
ரேகாவின் அழுகை நிற்பது போல் தெரியவில்லை.” நான் தவறு செய்துவிட்டேன் மேடம். நான் தாமோதரனுக்கு உதவி இருக்ககூடாது. இரண்டு லட்சத்துக்கு ஆசைப்பட்டது மிகப்பெரிய தப்பு”
”ரேகா, அழுகையை நிறுத்துங்கள். பொதுமக்களுக்கு உதவி செய்யவே நாங்கள் இருக்கிறோம். நாங்கள் உங்கள் நண்பர்களே”
“இல்லை மேடம். நான் தப்பு செய்துவிட்டேன்”
“என்ன தப்பு செய்தீர்கள் என்று சொல்லமுடியுமா?”
ரேகா சொல்ல ஆரம்பித்தாள். ”திருப்பி சொல்லமுடியுமா? நான் மொபைலில் பதிவு செய்து கொள்கிறேன். இது உங்களுக்கு உதவவே”
ரேகா மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்” மேடம், தாமோதரனுக்கு இரண்டு கடன் அக்கௌண்ட்டுகள் எங்கள் வங்கியில் உள்ளன. அந்த இரண்டு கணக்குகளும் எப்பொழுதுமே அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பின் எல்லையில் தான் இருக்கும். இந்த நேரத்தில் நான் தாமோதரனுக்கு உயர் அதிகாரிகளுடன் பேசி தற்காலிக ஓவர்டிராஃப்ட் வாங்கி கொடுத்திருந்தேன். அதை திருப்பி கட்ட நேரம் வந்தும் திருப்பி கட்டாமல் இழுத்தடிக்கிறார் தாமோதரன்.”
“எவ்வளவு ஓவர்டிராஃப்ட் வாங்கி கொடுத்தீர்கள், ரேகா?”
“பத்து கோடி மேடம். இரண்டு லட்சம் அன்பளிப்புக்கு விழுந்துவிட்டேன் மேடம்” என்றாள் ரேகா.
இன்ஸ்பெக்டர் அபியும் கருணாவும் வர சற்று தாமதமானது.
லாஃப்ரா,”நீங்கள் போகலாம் ரேகா. போகுமுன் உங்கள் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்து செல்லுங்கள். ஏதாவது விசாரணைக்கு கூப்பிட்டால் வந்து விடுங்கள்” என்று ரேகாவை அனுப்பி வைத்தாள்.
ரேகா நன்றி கூறி, இரவு நன்றாய் இருக்கட்டும்,என்று சொல்லி வெளியேறினாள்.
ஆனந்த்,”ஏன் மேடம், ரேகாவை விட்டுவிட்டீர்கள்” என்று லாஃப்ராவிடம் கேட்டான்.
”நான் இது பற்றி உனக்கு சொல்ல வேண்டுமென்றால் ஜொகியைப் பற்றி சொல்ல வேண்டும். ஜொகி சொல்வார், ஒரு கேசின் முடிவை விரைவில் அணுக வேண்டும் என்றால் தேவை இல்லாத நபர்களை ஒவ்வொருவராக கழட்டி விடு. இது உன்னை நேர்கோட்டில் போக உதவும்.”
ஆனந்த் கேட்டான்,”அப்படி கழட்டி விட்ட பறவை தானே ரியா மேடம். பறந்துவிட்டதே”
“ஆனந்த் ஜொகி சொல்வது போல கழட்டிவிடப் பட்ட நபர்களில் ஒருவரே உன்னை முக்கியமாக சந்தேகப்பட வேண்டியவரிடம் தள்ளிப் போவார்”
கமிஷனரிடம் இருந்து லாஃப்ராவுக்கு அழைப்பு வந்தது.
அன்புடன்
மீரா போனோ
(எஃப்.எம்.பொனவெஞ்சர்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...