செய்திகள் :

கிறிஸ்துமஸ் கொலு - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

மறைதிரு டாக்டர் தேவசகாயம் அந்தச் சிறு நகரத்தில் இயங்கி வரும் சீஹன்-பால்குலுத்தரன் திருச்சபையின் முதன்மை போதகர். பாசமிகு பண்பாளர்.

‘பாவ மன்னிப்பு,’ என்பது கிறிஸ்தவ மதத்தின் உயரிய சம்பிரதாயங்களில் ஒன்று. மனிதர் செய்கின்ற பாவத்தை ‘கடவுளினுடையப் பிரதிநிதியாக இயங்குகின்ற குருமார்கள் மூலம் மன்னிக்கிறார்.’ என்ற கிறிஸ்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை இம்மியளவும் சிதைக்காத, உயர்வான உத்தமமான பாதிரியார் அவர்.

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் நாளிலும் தேவாலய வளாகத்தில் ‘கிறிஸ்துமஸ் கொலு ‘ வைத்து ஏசுநாதரின் பிறப்பு முதல் மீண்டும் உயிர்த்தெழுதல் முடிய அமைந்திருக்கும் அனைத்துக் கருத்துருக்களையும், சுத்தமான உதாரணங்களோடு சுவைபட விவரிப்பார்.

அந்த விவரிப்பைக் கூர்ந்து கவனிக்கும் ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் ஆகியோர், அவரின் சொல் வடிவத்தில் இருப்பதற்கு உயிர் கொடுத்துக் காட்சிப் படுத்துவார்கள்.

சித்தரிப்புப் படம்

கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டக்களுக்கு ஆகும் செலவினங்களை டாக்டர் தேவசகாயம் குடும்பினர் மட்டுமே நான்கு தலைமுறையாக ஏற்றுச் செய்து வருகிறார்கள். இது நாலாவது தலைமுறை.

வேறு எவரேனும் செலவுக்குப் பணம் தருகிறேன் என்று சொன்னால், “தாருங்கள். அதை தேவாலய அறக்கட்டளை நிதியில் சேர்த்து விடுகிறேன்” என்பார்.

பாதிரியாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேவாலயத்தில்அலங்கார ஜோடனைகளை எல்லாம் செய்வார்கள். ஈடுபாட்டுடன் கொலு வைப்பார்கள். ஊரே திரண்டு ஆசையாகச் சேவை செய்யும் அழகே அழகு. 

‘அன்பு இருக்கும் இடத்தில் கடவுள்’ என்று டால்ஸ்டாய் சொன்ன வாசகத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் அந்தச் சிறு நகரம்.

சித்தரிப்புப் படம்

தேவசகாயம் அவர்களின் ஒரே மகள் பியூலா.

சின்ன வயதிலிருந்தே பியூலாவுக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் அதிகம்.

அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதல், ஒவ்வொரு கிறிஸ்மஸ் கொலுவிலும், அவள் கையால் வரையப்பட்ட ஒரு ஓவியத்தை வைத்து அவளை ஆசீர்வதிப்பார் அருட்தந்தையும் பெற்ற தந்தையுமான தேவசகாயம்.

இதோ, தற்போது மருத்துவராகிப் பெரும் புகழ் பெற்றிருக்கும் நிலையிலும் கொலுவில் காட்சிப் படுத்த, ப்யூலாவின் படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ப்யூலாவும் ‘எப்போது வரைவது’ என்று நேர நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் தொழிலுக்கு  வந்த பின், பணியும் பொறுப்புகளும் கூடி விட்டதால் சரியான நேரத்துக்கு ஓவியத்தை வரைந்து கொடுக்க முடிவதில்லை என்றாலும் எப்படியோ கடைசி நேரத்தில் வரைந்து அதை மின்னஞ்சலில் அனுப்பி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். 

தற்போது 'டாப்', போன்ற மின்னணு சாதனங்களெல்லாம் வந்து விட்டதால் பென்சில், வண்ணங்கள், தூரிகைகள் கேன்வாஸ், எதையும் தேடவேண்டிய அவசியமில்லை. 

‘கத்தியின்றி யுத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது..! என்று கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் சொன்னதைப் போல, ‘வண்ணமின்றி, காகிதமின்றி ஓவியங்கள் வருகுது..’ என்று சொல்லலாம் இப்போது.

இன்று பியூலா கைராசி மருத்துவர் என்று ஊரே புகழும் புகழ் பெற்ற மருத்துவர். 

மெட்ரோ பாலிட்டன் சிட்டியில், நெரிசலான   பகுதியில் நான்கு தளங்களில் சுறுசுறுப்பாய் இயங்கிவரும், மிகப்பெரிய பாலி-கிளினிக் மருத்துவமனையில் மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார் டாக்டர் பியூலா.

எந்த நேரத்திலும் அவர்களை மேனேஜிங் டைரக்டர் என்ற பிரத்தியேக அறையில் பார்க்கவே முடியாது. எப்பொழுதும் தனக்கென ஒதுக்கப்பட்ட,  கன்சல்டிங் அறையில்தான் உட்கார்ந்து காலை முதல் இரவு வரை நோயாளிகளை பரிசோதிப்பார்.

மகப்பேறு மருத்துவர்தான் என்றாலும் சாதாரண தலைவலி காய்ச்சல் முதல் கேன்சர் வரை எல்லாருமே அவரிடம் ஒரு குடும்ப மருத்துவர் என்ற முறையில் வந்து முதலில் பார்ப்பார்கள்.

ப்யூலா நோயாளியைப் பரிசோதித்துவிட்டு, அந்த மனிதருடைய வியாதியை குணப்படுத்த, யார் பொருத்தமான மருத்துவர் என்று பரிந்துரைப்பார்.

மருத்துவர்கள் வட்டாரத்திலும், ப்யூலாவுக்கு மிகவும் மரியாதை இருந்தது.

பைபிள் நீதி மொழிகள் 22:4 சொல்வதைப்போல. ‘ நீதிமான்களின் பெயர் புகழ் பெற்று விளங்கும்..’ அல்லவா.!

‘டாக்டர் ப்யூலா அவர்கள் பரிந்துரை செய்யக்கூடிய மருத்துவர்களாக நாமும் ஆக வேண்டும்!’ என்று இளைய தலைமுறை மருத்துவர்கள் கூட டாக்டர் ப்யூலாவைக் கவர என்னென்னவோச் செய்வார்கள். ஆனால் போலிகளைக் கண்டு ஏமாறும் ரகமல்ல டாக்டர் ப்யூலா.

‘மேனேஜிங் டைரக்டர்’ என்ற எந்தவிதமான தன்முனைப்பும் இன்றி நோயாளிகளை அணுகுவதால், டாக்டர் பியூலாவைப் பார்க்க வரும் டோக்கன்தான் அதிகம் வரும் அந்த பாலி கிளினிக்கில்.

‘அப்பாயின்மென்ட்’ கிடைக்கவில்லை என்றால், என்று கிடைக்கிறதோ அன்று டோக்கன் போட்டு சிகிச்சைக்கு வருவார்கள்.

செய்யும் வேலையில் முழு ஈடுபாட்டோடும் பய பக்தியோடும் செய்யப்படுவதும். நூறு சத அர்பணிப்புணர்வோடும் செய்யும் எந்தத் தொழிலும் பிரகாசிக்கத்தானே செய்யும்.

பியூலா கேபிரியல் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள்.

ஒரு மகன் ஒரு மகள்.

பியூலாவின் கணவர் ஆர்க்கிடெக்ட்.

ஒவ்வொரு ஆண்டும் தேவாலயத்தின் முகப்பிலிருந்து தேவாலயம் உள் அரங்கு ஈறாக அலங்கரிப்பதை அவரே பொறுப்பு கட்டிக் கொண்டு செய்வார்.

ஒன்று கூட பழமை இன்றி, மொத்தமும் புதுமையாக இருக்க வேண்டும் என்று மிகவும் பிரயாசைப்படுவார் அவர்.

ஓராண்டு செய்ததைப் போல அடுத்த ஆண்டு இருக்கக்கூடாது என்பதுதான் கான்சப்ட்.

காட்சிகள் ஒன்றானாலும், ஒவ்வோராண்டும் வித்தியாசமாய் காட்சிப் படுத்தும் நேர்த்தியைக் கண்டு பார்வையாளர்கள் அனைவரும் வியந்துபோவார்கள்.

களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மரக்கூழ், கார்டு போர்டு அட்டைகள், வண்ணங்கள், தூரிகைகள் போன்ற கலை உபகரணங்களோடு பலவேறு கலைஞர்கள் அமர்ந்திருக்க, பாதிரியார் தேவசகாயம் பைபிளில் சொல்லப்பட்ட வர்ணனைகளையும் பல்வேறு, கவிஞர்களின் வர்ணனைகளையும் பிரசங்கம் மூலம், காட்சி படிமங்களாக கலைஞர்களின் கண் முன்னே நிறுத்தி விடுவார்.

காதில் வாங்கிய கலைஞர்கள் அவர் சொன்ன காட்சிகளை ஓவியமாகவும், சிற்பமாகவும் வடிப்பார்கள்.

அதில் இருக்கும் சிறு பிழைகளைச் சரி செய்து நகாசு செய்யச் சொல்வார் பாதிரியார்.

இப்படி ஒவ்வென்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதால், ‘கிறிஸ்துமஸ் கொலு’வை பார்த்து ரசிக்க வெளியூரிலிருந்து எல்லாம் ரசிகர்களின் கூட்டம் கூடும்.

வெளிநாட்டினர் கூட செய்தி கேள்விப்பட்டு, இங்கே வந்து கண்டு களித்து வியந்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

கேபிரியேல் வழக்கம் போல குழந்தைகளுக்குப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விடுப்பு சொன்ன அன்று இரவே குழந்தைகளுடன் ஊருக்கு வந்துவிட்டார்.

சவுக்குக் கழிகள், ஃபிரேம்கள், ஃப்ளக்ஸ்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வஜ்ரம், ஃபெவிகால், பல சைசுகளில் பிளைவுட் பலகைகள், சன்மைக்கா அட்டைகள், ஆணிகள் , செப்புக் கம்பிகள், கட்டிங் பிளேயர், திருப்புளி, ஆக்ஸா பிளேடு, என அனைத்து உபகரணங்களும் நேரம் காலம் பார்க்காமல் தேவகாரியம் ஆற்றிக் கொண்டிருந்தன.

தேவாலயத்தின் முகப்பு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பல வண்ணத் துணிகள் கொடிகள் பூச்செண்டுகள், தொம்பைகள், அனைத்தும் தகதகவென மிளிர்ந்தன.

பல்வேறு கலைஞர்களின் உழைப்பில் உருவான அத்தனை கலை வெளிப்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது வண்ண விளக்கு அலங்காரங்கள்.

‘இன்டீரியர் டெக்கர்ஸ்’ தேவாலயத்தின் உட்பகுதியை மிக நேர்த்தியாக அலங்கரித்து கொலுவை சிறப்பாக வடிவமைத்தனர்.

பியூலாவின் தம்பி ஆல்பர்ட்.

உள்ளூரிலேயே பல வித ஏஜென்சிகள் எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். 

ஒரே ஒரு தொழில் செய்து குடும்பத்தை சமாளித்து விடமுடியுமா இந்தக் காலத்தில். 

மேல் வருமானத்துக்காக வீட்டிலேயே ஜெராக்ஸ் மெஷின்  லேமினேஷன் கிட், என்று வாங்கிப் போட்டு, நேரம் காலம் பார்க்காமல் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தல், ஃபோட்டோ ஷாப் மூலம் பெயிண்டிங் செய்து தருதல், ஃப்ளக்ஸ் பெயிண்டிங், ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்து தருதல்,  ஆன்லைனில் மின் கட்டணம், வீட்டு வரி கட்டித் தருதல்  போன்ற கம்ப்யூட்டர் மூலம் செய்யும் தொழில்களையெல்லாம் செய்து நியாயமான கட்டணத்தில் சேவை செய்து வருகிறார். 

‘விரையொன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்.!’

‘தாயைப் போல் பிள்ளை நூலை போல் சேலை!’ அல்லவா.

இயேசுவை உயிரினும் மேலாய் நேசிக்கும் குடும்பம் அல்லவா..

பியூலாவை அழைத்து வர சென்னைக்குக் கார் அனுப்பப்பட்டு விட்டது.

Meta AI

கணவரும் குழந்தைகளும், முன்பே ஊருக்கு வந்து விட்டதால், மருத்துவமனையில் இருந்து  நேராகக் கார் ஏறி ஊருக்கு வர வசதியாய் இரவு சாப்பாடும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். 

டிரைவர் நான்கு மணியிலிருந்து மருத்துவ மனையில்  காத்திருந்தார்.

இன்று காலை முதல் ஓயாத உழைப்பு டாக்டர் ப்யூலாவுக்கு. 

முற்பகலில் இரண்டு சிசேரியன் செய்திருக்கிறார். 

மதியம் ஒரு நார்மல் டெலிவரி. 

மற்றபடி நிறைய நோயாளிகளை பரிசோதித்திருக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு,   கிட்டத்தட்ட 30 பேஷன்ட்ஸ் இருந்தார்கள்.

‘5 மணிக்குக் புறப்படத் திட்டமிட்டால்தான் ஆறு மணிக்காவது கிளம்ப முடியும்..!’ என்று உணர்ந்த ப்யூலா, தன் இருக்கையை விட்டு வெளியே வந்தார். 

தன் அறைக்கு வெளியே டோக்கன் பெற்றுக் காத்திருக்கும் நோயாளிகளைப் பார்த்துப் பேசினார். 

“அனைவருக்கும் வணக்கம். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.!”

“கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் டாக்டர்..”

“நான் சொல்றதை கவனமாக் கேளுங்க. நான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ்க்கும் சொந்த ஊர் போறது வழக்கம்.”

“வெல்கம் மேடம்.. தாராளமாக் கிளம்பிப் போங்க. ஜெனரல் செக் அப்தான். நாங்க கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சி வந்து பாத்துக்கறோம் என்று எழுந்தது முக்கால்வாசிக் கூட்டம்.

அவர்ளைக் பார்த்துக் கை கூப்பினார் ப்யூலா. 

மீதமிருந்த தவிர்க்க முடியாமல் உடனே பார்க்கவேண்டிய ஒரு சில பேஷண்ட்களை கவனித்து அனுப்பினார்.

கார் டிரைவர் ஊரிலிருந்து கொடுத்தனுப்பிய ஆகாரப் பையை கொண்டு வந்து ப்யூலாமுன் வைத்தார். 

“ஆறு மணிக்குக் கிளம்பிரலாமா..?”

“சரிம்மா..”

ஆகாரப் பையைப் பார்த்தார். ஃப்ளாஸ்கில் இருந்த காபியை எடுத்துப் பருகினார். 

மிகவும் அசதியாக இருந்தது. 

அதே நேரத்தில், ‘இன்றைய நள்ளிரவுப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்பு கொலுவில் வைக்க படம் வரைந்துவிட்டால் பெரிய பொறுப்பு முடிந்துவிடும்’ என்று நினைத்தவண்ணம் ‘டாப்’பையும் ‘ மின் பேனாவையும்’ கையில் எடுத்துக் கொண்டு, டி எஸ் இலியட் எழுதிய ‘’THE JOURNEY OF THE MAGI’ என்ற கவிதை வரிகளை உள்வாங்கி அதை ஓவியமாய் வெளிப்படுத்தத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். 

அதுதான் அவருடைய தந்தை அந்த வருட ஓவியத்துக்காகக் கொடுத்த கான்ஸப்ட்.

சித்தரிப்புப் படம்

மிக மிக கனமான அந்தக் கவிதையைப் படிக்கும்போது அவள் மனதில் மேலும் பல ஜன்னல்கள் திறந்து கொண்டன. 

மனதில் ஓவியம் தோன்றிவிட்டது.

வரைவதற்கு ஆயத்தமான கனத்தில் அறைக்கதவு பதற்றமாக தட்டப்பட்டது.  

“யெஸ் கமின்..”

ரிஷப்ஷனிஸ்ட்டு பதற்றத்தோடு நின்றாள்.

 முகக் குறிப்பைக் கண்டதுமே ‘ஏதோ எமர்ஜென்ஸி வந்திருக்கிறது’ என்பதை அறிந்து எழுந்து வந்தாள் ப்யூலா .

ஸ்டெரெக்சரில் இருந்த கர்ப்பிணியை பார்த்தவுடன் “லேபர் வார்டுக்குக்குக் கொண்டு போங்க..” என்ற ப்யூலா, என்னென்ன மருந்து தர வேண்டும் என்னென்ன ஊசிகள் போட வேண்டும் என்பதையெல்லாம் சுற்றி நின்ற செவிலியர்களுக்கு சொல்லிவிட்டு,  மனதளவில் பிரசவம் பார்க்கத் தன்னை தயார் செய்து கொண்டாள்.  

பனிக்குடம் உடைந்த நிலையில், வந்திருந்த கர்பிணியை உரிய வகையில் அணுகியதில், இரண்டு மணி நேரத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத்தான் புறப்பட முடிந்தது ப்யூலாவால்.

“ஒரு வழியா இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டுக் கிளம்புங்கமா. கார்ல ஏறினதும்  தூங்கிரலாம்..” என்றார் டிரைவர்.

நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த உழைப்பு, ஓய்ந்து போன நேரத்தில் சாப்பிட்டது என எல்லாம் சேர்ந்து அயர்ந்து தூங்கினார் ப்யூலா.

எப்படியும் நள்ளிரவு 12 மணிக்குப் போக முடியாது. குறைந்த பட்சம் 1 மணிக்காவது போய் சேர்ந்து விடவேண்டும் என்று எண்ணத்தில் விரைந்து ஓட்டினார் டிரைவர்.

கூகுள் ‘இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்’ என்று சொன்னது.

‘பனிரெண்டரைக்கு ரீச் ஆகிவிடலாம்’ என்று கணக்குப் போட்டார் டிரைவர். 

டிரைவரின் கணக்கு இப்படி இருக்க 

ஆண்டவன் கணக்கு வேறு மாதிரி இருந்தது. 

சுற்றிலும் வயல்களும் காடுகளும் மண்டி, ஆளரவே இல்லாத அத்துவானத்தில், நடுச் சாலையில் தீப்பந்தங்கள், மொபைல் டார்ச் லைட்கள், அரிக்கேன் விளக்குகள் அனைத்தையும் பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் வழி மறித்தது.

அதிர்ந்தார் டிரைவர். 

வண்டியை நிறுத்தினார்.

நெருங்கி வந்தது கூட்டம்.

ஏதோ உள்ளுணர்வு உந்த முழிப்புத் தட்டியது ப்யூலாவுக்கு. நிலைமையை உள் வாங்கினார். சன்னல் கதவை இறக்கிவிட்டார். எட்டிப் பார்த்தார்.

சித்தரிப்புப் படம்

பெண் முகம் தெரியவே ஆண்கள் பின்னால் நகர்ந்து பெண்களை முன்னால் அனுப்பினர்.

கிராமத்துப் பண்பாடு இது.

டாக்டர் ப்யூலா என்பதைத் தெரிந்து கொண்ட சில பெண்கள், உணர்ச்சி வசப்பட்டார்கள். 

“தெய்வம் போல நீங்க வந்தீங்க டாக்டரம்மா.. பனிக்கொடம் ஒடைஞ்சி, தண்ணி வத்திப் போயி, புள்ளையும் வெளியே வராம உயிருக்குப் போராடுதும்மா ஒரு ஜீவன்..” யாரோ யாருக்காகவோ வேண்டுகோள் வைத்தார்கள்.

கிராமத்துப் பாரம்பரியம் இது.

கர்பிணியின் தற்போதைய நிலையில் இருக்கும் ஆபத்தை உள் வாங்கிய ப்யூலா, ‘கர்பிணி எங்கே.?.” என்று தன் ‘கிட்’ பையோடு டிரைவர் தொடர , அவசரமாய் நடந்தாள். 

“ஏதாவது கார், ஆட்டோ கிடைச்சா டவுனுக்குக் கொண்டு போயிரலாம்னு இங்கியே கொண்டு வந்துட்டோம்மா..” என்று சொல்லியபடியே அருகிலிருந்த வயல் வெளி ஓரத்தில் காவல் காப்பதற்காக கட்டப்பட்ட ஓலைப் பந்தலுக்கு உள்ளே அழைத்துச் சென்றார்கள். 

எந்த நேரத்திலும் ஒரு மருத்துவரை எமர்ஜென்சி கேஸ் அணுகலாம். ஒரு மருத்துவர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற மருத்துவ சித்தாந்தத்திலும், ‘BE PREPARED’ என்ற சாரண விழிப்புணர்வையும் மதிக்கும் ப்யூலாவின் ‘கிட்’டில் இருந்த செலைன், ஊசி மருந்துகள், அனைத்தையும் முறையாகச் செலுத்தி, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சில முதிர்ந்த மாதரசிகளின் துணையோடு சுகப்பிரசவமாக ஆண் குழந்தை ஜனிக்கத் துணை நின்றார் ப்யூலா.

அந்த நேரத்தில் டெலிபோன் ஒலிக்க, எடுத்துக் கொண்டு வந்தார் கார் டிரைவர். 

நடுக் காட்டில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த ப்யூலாவைக் வீடியோ காலில் கண்டு அனைவரும் மகிழ்ந்து ஆசீர்வதித்தனர்.

ஒரு வழியாக அனைத்து முறைகளையும் முடித்துவிட்டு வீட்டை அடைய, மணி மூன்று ஆகிவிட்டது.

சித்தரிப்புப் படம்

தேவாலய வளாகத்துக்கு வெளியே காரை நிறுத்தினார் டிரைவர். வளாகத்துக்குள் இருக்கும் குடியிருப்புதான் அவர்கள் வீடு.

மிட் நைட் மாஸ்' முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர் சிலர்.

சிலர் அலங்காரங்களை ரசித்துக் கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் சந்தோஷமாக உரையாடிக் கொண்டும் இருந்தனர்.

பியூலா காரை விட்டு இறங்கினாள்.. பிறகு பிறகு என்று தள்ளி போடாமல் இருந்திருந்தால் ஓவியத்தை வரைந்து கொடுத்திருக்கலாமே என்று தன்னிரக்கம் வந்தது ப்யூலாவுக்கு.

கார் கதவை திறந்து விட்ட பியூலாவின் தம்பி ஆல்பர்ட் பியூலாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் வண்ணமயமான அந்த அலங்கார வளைவுகள் வழியாக தேவாலயத்துக்குள்ளே அழைத்துச் சென்றார்.

"தம்பி என்ன மன்னிச்சிடு. இன்னொரு அரை மணி நேரத்துல ஒரு படம் வரைந்து கொடுத்துடறேன் என்றாள் பியூலா"

"அதான் உன் படம் கொடுத்துட்டியே .. ", என்றார் ஆல்பர்ட்

"என்னோட பழைய படத்தை போட்டு ஒப்பேத்திட்டியா...?”

"உள்ளே வந்து பாரேன்."

ப்யூலா, உள்ளே செல்லும் பொழுது அவளைப் பார்த்தவர்கள் எல்லோரும், மிகவும் சந்தோஷமாக வாழ்த்து சொன்னார்கள் ‘ப்ரவுட் ஆப் யூ 'என்றார்கள்.

கொலுவில் முதல் முதலில் காட்சிப்படுத்தப்பட்ட அந்த ஓலைக் குடிசைக் கட்டமைப்பினுள் ,நள்ளிரவு பிரசவம் பார்த்த அந்தக் குழந்தையை ப்யூலா, கையில் ஏந்தியவாறு இருந்த படம் போட்டோஷாப்பில் பெயிண்டிங் செய்யப்பட்டு லேமினேஷன் செய்து வைக்கப்பட்டிருந்தது.

வயற்காட்டின் குடிசையில் பிரசவம் பார்த்த புகைப்படத்தை புனிதமான தேவாலய கொலுவில் பார்த்ததும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கும் கலந்து கண்ணீரால் வெளிப்பட்டன.

*********

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் – அத்தியாயம் 4 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

டீன் ஏஜ், கண்ணாடி முன் நின்றதில் வந்த மாற்றம்... `பல்'லேகா -3 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே விடுதலை - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை| பகுதி 9

புத்தகக் கடை திறப்பதற்கு மிஷாவ்வின் மனைவி வில்லி ஆன் ஆர்வம் காட்டவில்லை.அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்குப் பின், கறுப்பர்களுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில், வாசிப்புப் பழக்கமே இல்லாத... மேலும் பார்க்க

பொம்மைகள் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

'இதற்காகத்தான் புத்தகக் கடையைத் தொடங்கினேன்...' - லூயிஸ் மிஷாவ் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 8

மிஷாவ் அவர்கள், பேராசிரியர் என்றழைப்பதற்கு மிக மிகப் பொருத்தமானவர் என்பதைக் என் உள்மனம் ஒப்புக்கொண்டது.தான் எப்படி புத்தகக் கடை வைக்கும் முடிவுக்கு வந்தேன் என்பதை, சித்தாந்த பயிலரங்கில் உரையாற்றுவதுபோ... மேலும் பார்க்க

புகை - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க